தஞ்சாவூர்: தமிழக பாரம்பரிய உடை அணிந்தபடி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார்.
தஞ்சாவூருக்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க இன்று வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிற்பகல் 3 மணிக்கு, புகழ்பெற்ற சரஸ்வதி மகால் நூலகத்துக்கு சென்று அங்குள்ள அரிய வகை நூல்களை பார்வையிட்டார். அப்போது அவர் பேன்ட் சட்டை அணிந்திருந்தார். பின்னர் மாலை 5.30 மணிக்கு தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு தமிழக ஆளுநர் பட்டு வேட்டி, பட்டுத் துண்டு, வெள்ளை நிற சட்டை அணிந்து வந்தார். அவருடன் அவரது மனைவி லெட்சுமி மஞ்சள் நிற சேலை உடுத்தியிருந்தார்.
பெரிய கோயிலுக்கு வந்த ஆளுநரை, இந்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் வரவேற்றார். பின்னர் அவருக்கு பெரிய கோயில் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கோயிலில் வராகி அம்மன், பெருவுடையார், பெரியநாயகி அம்மனை தரிசனம் செய்தார். அப்போது கோயிலில் உள்ள கல்வெட்டுகள், சிற்பங்களை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜ பான்ஸ்லே விளக்கி எடுத்துக் கூறினார்.