சென்னை: தமிழகத்தில் 336 நடமாடும் மருத்துவமனைகளை விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும், இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்றும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று நடைபெற்ற தடுப்பூசி முகாமை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று, கொரோனா உயிரிழப்பு பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளதாகவும், தமிழகத்தில் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருவதாகவும், தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசிகளின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுவதாகவும் கூறினார்.
சீனாவின் ஒரு நகரில் மீண்டும் ஊரடங்கு போடப்பட்டிருப்பதை கருத்தில்கொண்டு பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர்ம், கஜினி முகமது போல் கொரோனா எத்தனை தடவை படை எடுத்தாலும் அதனை முறியடிக்கும் வகையில் நாம் தடுப்பூசி செலுத்துதல் அவசியம் என்றார்.
மேலும், மக்கள்தொகை அதிகரிப்பதற்கு ஏற்றவாறு நகர்ப்புற மற்றும் கிராமப்புற சுகாதார மையங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழகத்தில் 336 நடமாடும் மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளதாகவும், அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என்றும் கூறினார்.