சென்னை: ‘தினமணி கதிர்’ இதழின் முன்னாள்ஆசிரியர் மறைந்த கே.ஆர்.வாசுதேவன் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, குடியரசு துணைத் தலைவர், பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதிமுக முன்னாள் எம்.பி.யான வா.மைத்ரேயனின் தந்தை கே.ஆர்.வாசுதேவன். கடந்த 1922 மார்ச் 20-ம்தேதி பிறந்த அவர், 1987 ஆக.19-ம்தேதி காலமானார். 1943-ம்ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற அவர், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார்.
கோபாலகிருஷ்ண கோகலே நிறுவிய இந்திய பணியாளர்கள் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக இருந்தார். அத்துடன் இச்சங்கத்தின் கேரள மாநில கிளையின் பொறுப்பாளராக பதவி வகித்தார். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வீடுகள், பள்ளிக்கூடங்கள் கட்டியதில் பெரும் பங்காற்றினர்.
மத்திய அரசின் கலால் துறையிலும் பணியாற்றிய இவர், பத்திரிகையாளராகவும் பணியாற்றினார். ‘தினமணி கதிர்’ இதழின் ஆசிரியர், ‘தினமணி’ நாளிதழின் உதவி ஆசிரியர் மற்றும் பல்வேறு பத்திரிகைகள், இதழ்களிலும் பணியாற்றி உள்ளார்.
மூதறிஞர் ராஜாஜி தொடங்கிய சுதந்திரா கட்சியிலும், ஆர்எஸ்எஸ் அமைப்பிலும் இணைந்து செயல்பட்டதோடு, பாஜகவின் தேசிய கவுன்சில் உறுப்பினராகவும் பதவிவகித்துள்ளார். இதய மலர்கள், காவியத் தென்றல் உட்பட 7 நூல்களையும் எழுதியுள்ளார்.
இந்நிலையில், மறைந்த வாசுதேவனின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு: மறைந்த கே.ஆர்.வாசுதேவன் பொது வாழ்விலும், பத்திரிகை துறையிலும் ஆளுமை பெற்றிருந்தார். பத்திரிகை, அரசியல் துறைகளில் பணியாற்றிய அவர் சிறந்த பேச்சாளராக திகழ்ந்ததோடு, தமிழ், ஆங்கிலத்தில் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். அவரது நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவரது மகன் வா.மைத்ரேயன் சிறப்பு மலரை கொண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
பிரதமர் மோடி: பன்முகஆளுமை கொண்டவரான கே.ஆர்.வாசுதேவன், எழுத்தின் மனிதராக திகழ்ந்தார். தமிழ் இலக்கியத்துக்குப் பெரும் பங்காற்றியுள்ளார். அவரது நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு கொண்டு வரப்படும் சிறப்பு மலர் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பதோடு, நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும்.