அசாமில் இருந்து திருப்பூருக்கு வந்த ரெயிலில் இருந்து ஆண் சடலத்துடன் இறங்கிய வடமாநில தொழிலாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து கோவை நோக்கி செல்லும் சில்சார் எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளிக்கிழமை திருப்பூர் ரயில் நிலையம் வந்தது.
அதிலிருந்து 2 வடமாநில இளைஞர்கள், கம்பளி போர்த்தப்பட்ட நிலையில், சடலத்துடன் இறங்கியுள்ளனர். இதனை கண்காணிப்புக் கேமராவில் பார்த்து விரைந்து சென்ற ரயில்வே போலீசார், இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
இறந்தவர் சில்சார் பகுதியை சேர்ந்த அர்பிந்த்ராய் என்பதும் ஜோலார்பேட்டைக்கு டிக்கெட் எடுத்து பயணித்தவர் என்பதும் தெரியவந்தது. ஜோலார்பேட்டை வந்ததும் உடன் பயணித்தவர்கள் அவரை எழுப்ப முயன்றபோது அவர் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.
அவரிடமிருந்த செல்போன் மூலம் உறவினர்களைத் தொடர்பு கொண்டபோது, சடலத்தை திருப்பூர் ரயில் நிலையத்தில் இறக்கி வைக்கும் படியும், தாங்கள் வந்து எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே போலீசுக்கோ, டிக்கெட் பரிசோதகருக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற விவரம் தெரியாமல் அந்த இளைஞர்களும் சடலத்தோடு இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.