Tamilnadu News Update : அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்து தற்போது மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, கட்சியில் வேகமாக வளர்ந்து வருவது நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மகளின் திருமணத்தில் நடந்த நிகழ்வு தெளிவாக உணர்த்தியுள்ளது.
திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மகள் நித்திலாவுக்கும், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச்செயலாளர் டாக்டர் மகேந்திரன் மகன் டாக்டர் கீர்த்தனுக்கும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் திமுக நிர்வாகிகள் மட்டுமல்லாமல், கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இதனிடையே முதல்வர் ஸ்டாலின் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மண்டபத்திற்கு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மண்டபத்தில் அமர்ந்திருந்த தொழிலதிபர்கள், மற்றும் கூட்டணி கட்சி தலைர்கள் உள்ளிட்ட பலரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். இதில் மண்டபத்தின் முதல் வரிசையில் இருந்த நாற்காளியில் தொழிலதிபர்கள் மற்றும் அமைச்சர்கள் அமர்ந்திருந்தனர்.
இதில் செந்தில் பாலாஜிக்கு இருக்கை இல்லா சூழலில், திமுக பொதுச்செயலாளரும், தற்போதைய நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் செந்தில் பாலாஜிக்காக அட்ஜஸ்ட் செய்துகொண்டு தனது அருகில் மற்றொரு நாற்காளியை போட சொல்லி அவரை அமர வைத்தது பலரின் புருவத்தையும் உயர்த்தியது. அவ்வளவு எளிதாக யாரிடமும் நெருக்கம் காட்டாத துரைமுருகன், செந்தில் பாலாஜிக்காக சீட் அட்ஜஸ்ட் செய்துகொண்டது வியப்பில் ஆழ்த்தியது.
தொடர்ந்து திமுகவை சேர்ந்த பலரும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வணக்கம் தெரிவித்து மரியதை செலுத்தியதை தொடர்ந்து அவருடன் இணைந்து செல்பி எழுத்துக்கொண்டனர். நகர்புற உள்ளாட்சி தேர்தலில், அதிமுகவின் கோட்டை என்று அழைக்கப்பட்ட கோயம்புத்தூரில் திமுக தனது கோட்டையாக மாற்ற தீவிரமாக பணியாற்றி அதில் வெற்றியும் கண்ட செந்தில் பாலாஜிக்கு திமுகவில் தற்போது செல்வாக்கு அதிகரித்துள்ளது.
திருமண மண்டபத்தில் செந்தில் பாலாஜிக்கு கிடைத்த மரியாதை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினாலும், மண்டபத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் இதை கண்டுகொள்ளாதது போல் அமர்ந்திருந்தார்.
“ “