தென்காசி: மாணவி எடுத்த விபரீத முடிவு-பேராசிரியரின் செயல்தான் காரணமென மாணவர்கள் போராட்டம்

சங்கரன்கோவில் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கல்லூரி மாணவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி – சிந்தாமணியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகள் இந்து பிரியா. கணேசன் இறந்துவிட்ட நிலையில், அவரது தாய் மாடத்தி அம்மாள் கூலி வேலை செய்து மகள் இந்து பிரியாவை புளியங்குடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படிக்க வைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி உலக மகளிர் தினத்தையொட்டி கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது .அப்போது பிகாம் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் செல்போன் கொண்டு வருவதற்கு தடை விதித்திருந்தனர். இதனால் மாணவர்கள் யாரும் செல்போன் கொண்டு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்து பிரியா அருகிலுள்ள மற்றொரு துறையைச் சேர்ந்த மாணவியின் செல்போனை வாங்கி படம் எடுத்ததாகக் கூறப்படுகிறது.
image
இதை அறிந்த பி.காம். துறையைச் சேர்ந்த பேராசிரியர் முத்துமணி என்பவர் இந்து பிரியாவை மன்னிப்பு கடிதம் எழுதித்தரக் கோரி நிர்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இந்து பிரியா இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தகவலறிந்த புளியங்குடி போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து மாணவியின் தற்கொலைக்கு காரணமான பேராசிரியர் முத்துமணியை கைது செய்தால்தான் பிரேத பரிசோதனை நடத்த அனுமதிப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மாணவர்கள் கூறினர். இதைத் தொடர்ந்து போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வாசுதேவநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் சதன் திருமலைக்குமார் பாதிக்கப்பட்டவர்களிடமும் மாணவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து தகவல் அறிந்த பல்கலைக்கழக பதிவாளர் மருது குட்டி புளியங்குடி வந்து மாணவர்களுடனும், இந்து பிரியா உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தூக்கிட்டு இறந்த இந்து பிரியா குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும், தற்கொலைக்கு காரணமான பேராசிரியர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் மதுரை பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.