திப்ருகர்:
அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தில், 5 வயது சிறுவனை கொலை செய்த நபரை அப்பகுதி தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தோலாஜன் தேயிலைத் தோட்டத்தில் நடந்துள்ளது.
இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு கூறுகையில், “குற்றவாளி சுனித் தாந்தி மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அவரது வீட்டின் அருகே சில சிறுவர்கள் இன்று விளையாடிக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த சுனித் தாந்தி, உஜ்ஜால் முரா என்ற சிறுவனைப் பிடித்து அவன் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார்.
இதையடுத்து சுனித் தாந்தியை பிடித்த உள்ளூர் மக்கள், அவரை உயிரோடு எரித்துள்ளனர். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை நடைபெறுகிறது” என்றார்.