புதுடெல்லி: 5 மாநில தேர்தல் தோல்வியை தொடர்ந்து பரபரப்பான சூழலில் காங்கிரஸ் காரியக் கமிட்டி நாளை கூடவுள்ள நிலையில் இந்தக் கூட்டத்தை ஜி 23 தலைவர்கள் புறக்கணிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியில் இருந்த பஞ்சாபில் காங்கிரஸ் பெரும் தோல்வியை தழுவியது.
மொத்தம் மூன்று மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் எண்ணிக்கை தற்போது இரண்டு மாநிலமாக குறைந்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.
காங்கிரஸ் தோல்வி குறித்து ஆலோசனை செய்ய காங்கிரஸ் காரிய கமிட்டி நாளை கூடுகிறது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. 5 மாநில தேர்தல் தோல்வி மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்துக்கு முன்பாக நாளை காலை கட்சியின் நிர்வாகிகள் சிலரை சோனியா காந்தி தனது வீட்டுக்கு அழைத்து பேசவுள்ளார்.
இந்தநிலையில் காங்கிரஸ் தலைமையில் மாற்ற வேண்டும் எனக் கோரி வரும் மூத்த தலைவர்கள் ஜி 23 தலைவர்களில் சிலர் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் உள்ளனர். அவர்கள் இந்த காரியக் கமிட்டியில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்ற பிறகு குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியாவுக்கு கடிதம் எழுதினர். காங்கிரஸ் கட்சிக்கு புது ரத்தம் ஊட்டும் வகையில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர்கள் அந்த கடிதத்தில் வலியுறுத்தி இருந்தனர்.
இவர்கள், மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் இல்லத்தில் சந்தித்து பேசினர். மாநிலங்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, கட்சியின் எம்.பி.க்கள் கபில் சிபல், மணீஷ் திவாரி, அகிலேஷ் பிரசாத் சிங், ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ராகுல் காந்தியின் தலைமையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சில தலைவர்கள் கூறியதாக தெரிகிறது. மேலும் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் தலைவர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் அந்தக் கூட்டத்தில் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் நேரு குடும்பத்தினரை புகழ்வதிலேயே முனைப்புடன் இருப்பார்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தெளிவான விவாதம் எதுவும் நடைபெறாது என்பதால் கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற ஆலோசனையும் நடைபெற்றதாக தெரிகிறது.