சண்டிகார்,
பஞ்சாப்பில் 92 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்து உள்ளது. இதன் மூலம் புதிய முதல்-மந்திரியாக பகவந்த் மான் பொறுப்பேற்க உள்ளார்.
காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மாதம் 20-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. 117 இடங்களை கொண்ட இந்த மாநிலத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.
இந்த தேர்தலில் காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜனதா கூட்டணி என 4 முனை போட்டி நிலவியது. அத்துடன் காங்கிரஸ் சார்பில் முதல்-மந்திரியாக இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜினாமா செய்த அமரீந்தர் சிங்கின் புதிய கட்சியும் பா.ஜனதாவுடன் இணைந்து களம் கண்டது.
பெரும் எதிர்பார்ப்பு நிலவிய பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடையும் எனவும், அங்கு ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும் எனவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தன.
இந்த நிலையில் பஞ்சாப் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையின் தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்தது. அதேநேரம் ஆளும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தொடர்ந்து பின்தங்கினர். நேரம் செல்லச்செல்ல ஆம் ஆத்மியின் முன்னணி எண்ணிக்கை அதிகரித்தது. இறுதியில் மொத்தமுள்ள 117 இடங்களில் 92 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.
மாநிலத்தில் பெரும்பான்மை பெறுவதற்கு 59 இடங்களில் வெற்றி பெற வேண்டிய நிலையில், 92 இடங்களை பெற்றிருப்பதன் மூலம் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்றது.
அதேநேரம் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 18 இடங்களே கிடைத்தன. கட்சியின் மாநில தலைவர் சித்து, முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி மற்றும் மாநில மந்திரிகள் பலரும் தோல்வியை தழுவினர். இதைப்போல சிரோமணி அகாலிதளம் 3 இடங்களை மட்டுமே பெற்றது. அந்த கட்சியின் முன்னணி தலைவர்களான பிரகாஷ் சிங் பாதல், சுக்பிர் பாதல் உள்ளிட்டோர் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.
பா.ஜனதா கூட்டணி 2 இடங்களிலும், பகுஜன் சமாஜ் ஓரிடத்திலும், சுயேச்சை ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. பா.ஜனதா கூட்டணியில் போட்டியிட்ட முன்னாள் முதல்-மந்திரி அமரீந்தர் சிங்கும் தோல்வியடைந்தார்.
பஞ்சாப்பில் அபார வெற்றி பெற்றதன் மூலம் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, முதல் முறையாக நாட்டின் தலைநகருக்கு வெளியே ஆட்சியமைக்க உள்ளது.
பஞ்சாப்பில் ஆம் ஆத்மியின் முதல்-மந்திரி வேட்பாளராக பகவந்த் மான் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தார். அதன்படி விரைவில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூடி அவரை முதல்-மந்திரியாக முறைப்படி தேர்வு செய்கிறார்கள்.
இந்த பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை ஆம் ஆத்மி முடுக்கி விட்டு உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து பஞ்சாப் சென்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலும் இதற்கான பணிகளை முடுக்கி விட்டு உள்ளார். ஆம் ஆத்மியின் வெற்றியை பஞ்சாப் மட்டுமின்றி பல மாநிலங்களிலும் அந்த கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாப் முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள பகவந்த் மான், சண்டிகரில் உள்ள ராஜ்பவனில், கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த் மான், “நான் கவர்னரை சந்தித்து, எங்கள் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை அளித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினேன். பதவியேற்பு விழாவை எங்கு நடத்த வேண்டுமோ அங்கெல்லாம் சொல்லுங்கள் என்றார். இது பகத் சிங்கின் சொந்த கிராமமான கட்கர் கலனில் மார்ச் 16 அன்று மதியம் 12.30 மணிக்கு நடைபெறும்.
பஞ்சாப் முழுவதும் உள்ள வீடுகளில் இருந்து மக்கள் விழாவிற்கு வருவார்கள், அவர்களும் பகத்சிங்குக்கு அஞ்சலி செலுத்துவார்கள். எங்களிடம் ஒரு நல்ல அமைச்சரவை இருக்கும், வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் மற்றும் இதுவரை எடுக்கப்படாத முடிவுகள் எடுக்கப்படும். எனவே, நீங்கள் காத்திருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.