ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தனித்தனியே நடந்த மூன்று தாக்குதல்களில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி உட்பட 4 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் அடுத்தடுத்து 3 பஞ்சாயத்து தலைவர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதனால், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இடையே பீதி நிலவுகிறது. தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டையை பாதுகாப்பு படைகள் தீவிரப்படுத்தி இருக்கின்றன. இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் செவக்லான் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்களின் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி உட்பட 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கந்தர்பால் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் நேற்று அதிகாலையில் நடந்த மோதலில் லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். அதே போல், குப்வாரா மாவட்டம், நெச்மா ராஜ்வார் பகுதியில் நடந்த மோதலில் இன்னொரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.