”சிவகாசி பட்டாசு விபத்து எப்போதைக்குமான கவலைக்குரிய செய்தி. பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் சரியான நெறிமுறைகளை பின்பற்றினால் நிச்சயம் விபத்தைத் தடுக்கலாம். நிச்சயம் விபத்தை தடுப்பதற்கு உரிய அதிகாரிகளின் ஆலோசனை பெற்று தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன்” என்கிறார் முதன்முறையாக மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள சிவகாசி மாநகராட்சியின் மேயர் சங்கீதா.
சிவகாசியில் திமுக சார்பாக, 34-வது வார்டில் வெற்றி பெற்ற சங்கீதா, 10 வருடங்களுக்கு மேலாக அரசியல் இருந்து வருகிறார். சிவகாசியின் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சங்கீதாவின் பேச்சு, அப்பதவிக்கான ஆளுமையுடனும், அரசியல் புரிதலுடனும் உள்ளது. ’இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்காக, சிவகாசி மேயர் சங்கீதாவுடன் பேசினேன். அந்த உரையாடல், இதோ:
* சிவகாசியின் முதல் மேயராக அறிவிக்கப்பட்டபோது மனநிலை எப்படி இருந்தது?
“மிகவும் பெருமையாக இருந்தது. முதல் மேயராக சிவகாசிக்கு, அதுவும் ஒரு பெண் மேயரை தலைமை அறிவித்தது மகிழ்ச்சி அளித்தது. மக்களுக்கு நல்லது செய்வதற்கு கிடைத்த வாய்ப்பாகத்தான் இந்த மேயர் பதவியைப் பார்க்கிறேன்.”
* எத்தனை வருடங்களாக அரசியலில் இருக்கிறீர்கள்…
“2005-ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருக்கிறேன். திருமணத்துக்குப் பிறகுதான் அரசியலுக்கு வந்தேன். எனது கணவர் குடும்பத்தில் நிறைய பேர் அரசியல் ஆர்வம் உள்ளவர்கள். அரசியல்தான் அங்கு பேசும்போருள். எனது கணவர் 20 வருடங்களாக அரசியலில் இருக்கிறார். அவர்கள் மூலம்தான் எனக்கும் அரசியல் ஆர்வம் வந்தது.”
* மேயரானது குறித்து உங்கள் பகுதி மக்கள் என்ன கூறுகிறார்கள்?
”வரவேற்பும் உள்ளது, சில விமர்சனங்களும் உள்ளது. அவர்களின் தேவைகளை நான் நிச்சயம் பூர்த்தி செய்வேன் என்று நம்புகிறார்கள். அதனை நிறைவேற்றுவேன்.”
* பிடித்த அரசியல் தலைவர், பெண் தலைவர்…
”குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை. அனைவரது அரசியல் பேச்சுகளையும் கேட்பேன். மக்கள் சேவை செய்யும் அனைவரையும் பிடிக்கும்.”
* உள்ளாட்சி அமைப்புகளில் பதவியில் இருக்கும் பெண்கள் வெறும் கைப்பாவைகள்தான். அவர்களை இயக்குவது குடும்பத்திலுள்ள ஆண் உறுப்பினர்கள்தான் என்ற பொதுவான குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில்…
”இது கொஞ்சம் உண்மைதான். ஆனால் எல்லாரும் தலையீடு செய்கிறார்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. சில முடிவுகளில் அவர்கள் ஆலோசனை வழங்கலாம். அதில் தவறு இல்லை. சில பெண் வேட்பாளர்களுக்கு அதுவே பலமாக உள்ளது. ஆனால், பெண்கள் தன்னிச்சையாக முடிவு எடுப்பது வரவேற்கத்தக்கது. தன்னிச்சையாக இயக்குவதற்கான களம் இங்கு உள்ளது. அதற்கான சுதந்திரத்தை நாம்தான் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.”
* கட்சித் தலைமை எதாவது நெருக்கடி தருகிறதா?
”நிச்சயமாக இல்லை. அனைத்து சுதந்திரத்தையும் தருகிறார்கள்.”
* 11 பெண்கள் மேயர்களாக அமர்த்தப்பட்டுள்ளார்கள். அதுபற்றி…
”ஆண்களுக்கு நிகராக பெண்களின் பங்களிப்பும் அரசியலில் முக்கியவதும் வாய்ந்தது என்பதை கட்சியின் தலைமை எடுத்துக் காட்டியுள்ளது. பெண்களிடம் அதிகாரம் வழங்கப்பட்டால் சிறப்பாக செய்வார்கள் என்று கட்சித் தலைமை நம்பிக்கை வைத்துள்ளது. நிச்சயம் இது அனைத்து பெண்களுக்கு உற்சாகத்தையும், நம்பிக்கையும் தரும்.”
* அரசியலை தவிர்த்து, உங்களை எப்படி அறிமுகம் செய்வீர்கள்..?
”அரசியலை தவிர்த்து என்னை அறிமுகம் செய்யச் சொன்னால் இல்லத்தரசி என்றுதான் கூறுவேன். நான் பி.ஏ. ஆங்கிலம் படித்துள்ளேன். சின்னச் சின்ன ஆசைகள் பெண்களுக்கு இருக்கும்தானே அதுவெல்லாம் எனக்கும் இருந்தது. ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் மனதின் ஓரத்தில் இருந்துகொண்டே இருக்கும். அது நடந்துள்ளது.”
* சிவகாசியின் முக்கிய பிரச்சினையாக நீங்கள் பார்ப்பது.. அதற்கு என்ன தீர்வு வைத்துள்ளீர்கள்..?
”சிவகாசியில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. சாலை வசதி, வாய்கால் வசதி, தெரு விளக்கு வசதி என எதுவும் சரியாக இல்லை. அங்காங்கே பள்ளங்கள் வெட்டப்பட்டு நடப்பதற்கே சிரமாக உள்ளது. இவற்றை எல்லாம் சரிசெய்ய வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளது. லாரிகளை குறிப்பிட்ட நேரத்துக்குத்தான் நகரில் செல்ல அனுமதிக்க வேண்டும். சுகாதாரப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். இவை எல்லாவற்றையும் சரி செய்ய வேண்டும். இதுதான் என் முதல் கடமை.”
* சிவகாசியில் பெரிய அளவில் மருத்துவமனை வசதி இல்லை என்று கூறப்படுகிறதே?
”மருத்துவ வசதி ஓரளவு உள்ளது. ஆனால், உயரிய சிகிச்சைக்கு மக்கள் சென்னைக்கும், மதுரைக்கும்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதில், மாற்றம் கொண்டுவர வேண்டும். மக்களின் குறை நிச்சயம் தீர்க்கப்படும்.”
* யார் ஆட்சியில் இருந்தாலும் சிவகாசி பட்டாசு விபத்து என்பது தொடர் கதையாக உள்ளது… அதற்கு என்ன தீர்வு வைத்துள்ளீர்கள்?
” சிவகாசி பட்டாசு விபத்து எப்போதைக்குமான கவலைக்குரிய செய்தி. பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் சரியான நெறிமுறைகளை பின்பற்றினால் நிச்சயம் விபத்தை தடுக்கலாம். நிச்சயம் விபத்தை தடுப்பதற்கு உரிய அதிகாரிகளின் ஆலோசனை பெற்று தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன்.”
* அடுத்த 5 ஆண்டுகள் மேயராக உங்கள் பயணம் எப்படி இருக்க போகிறது..?
”மேயராக ஒரு நாளையும் வீணடிக்கக் கூடாது என்று தீர்க்கமாக இருக்கிறேன். இல்லத்தரசியிலிருந்து மேயராக மாறி இருக்கிறேன். நிச்சயம் சாதனைப் பயணமாக இருக்க போகிறது. என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவேன். சிறந்த மாநகராட்சியாக சிவகாசியை உருவாக என்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்.”
தொடர்புக்கு: [email protected]