இந்தியாவில் மனைவியை 23 இடங்களில் கத்தியால் குத்திய கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டதை சேர்ந்தவர் அபூர்வா பூரணிக் (26). இவர் கல்லூரிக்கு தினமும் ஆட்டோவில் சென்று வந்தபோது ஆட்டோ ஓட்டுநர் முகமது அசாஸ் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்துள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இந்து குடும்பத்தில் ஒரே மகளாக பிறந்த அபூர்வாவை காதலன் முகமது அசாஸுக்கு எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் பெண்ணின் பெற்றோர் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
திருமணத்தின் போதே அபூர்வாவின் பெயர் அர்ஃபா பானு எனவும் மாற்றப்பட்டுள்ளது
இந்த நிலையில், திருமணமான சில நாட்களுக்குப் பிறகு, அபூர்வா மற்றும் அசாஸ் இடையே பிரச்சினை வெடிக்க தொடங்கியது. பிராமண பெண்ணான அபூர்வாவை அசைவ உணவுகளை சமைக்கவும், பர்தா அணியவும், மற்ற இஸ்லாமிய முறைகளை பின்பற்றவும் கணவர் அசாஸ் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், அதற்கு அபூர்வா மறுத்துவிட்டார். மேலும், அசாஸுக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கும் விஷயமும் அபூர்வாவுக்கு தெரிய வரவே பேரதிர்ச்சியில் அவர் உடைந்து போனார்.
அதே சமயம் அசாஸின் டார்ச்சரும் மோசமடைந்ததால், அபூர்வா அசாஸைப் பிரிந்து வாழ முடிவெடுத்து நான்கு மாதங்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். இறுதியாக, அசாஸை விவாகரத்து செய்ய முடிவு செய்து தாய் வீட்டில் இருந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விரும்பாத முகமது அசாஸ் அபூர்வாவுடன் தகராறு செய்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் 10ஆம் தேதி அன்று அபூர்வா தனது தாய் வீட்டருகே ஸ்கூட்டி ஓட்ட பழகி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அசாஸ் அபூர்வாவிடம் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதற்கு இளம்பெண் மறுக்கவே தான் கொண்டு வந்த கத்தியால் அபூர்வாவின் தலை, தோள் பட்டை, மார்பு மற்றும் முகத்தில் சரமாரியாக குத்திவிட்டு தப்பியுள்ளார். மொத்தம் 23 இடங்களில் கத்தி குத்துப்பட்டு ஆபத்தான நிலையில் ஜிம்ஸ் மாவட்ட மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி அசாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.