பழநி: பழநியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் தீர்த்தம் எடுத்துவந்து வழிபடத் துவங்கினர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 18-ம் தேதி நடைபெறவுளளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயிலின் பிரசித்திபெற்ற விழாக்களில் ஒன்றான பங்குனி உத்திரத் திருவிழா திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி மண்டபத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி எழுந்தருள அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற கொடி கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து தீபாராதனைகள் நடந்தது. பத்துநாட்கள் நடைபெறும் திருவிழாவில் திருக்கல்யாணம் மார்ச் 17-ம் தேதி நடைபெறவுள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 18-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.
மார்ச் 21-ம் தேதி கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவுபெறவுள்ளது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.