லண்டன்:பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர், பிலிப்பின் முதலாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை என, அவரது பேரனான இளவரசர் ஹாரி அறிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கணவர் பிலிப், 2021 ஏப்ரலில், 100 வயதை நெருங்க இருந்த நிலையில் மறைந்தார். அப்போது கொரோனா கட்டுப்பாடு காரணமாக, இறுதிச் சடங்கில் இளவரசர் ஹாரி உட்பட, 30 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அரசு விதிகளை மதித்து எலிசபெத் ராணி தனியாக அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்த்தார்.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட சூழலில், வரும், 29ம் தேதி பிலிப்பின் முதலாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்த உலகத் தலைவர்கள் பங்கேற்று, பிலிப்பின் சிறப்புகளை நினைவு கூற உள்ளனர்.
இந்நிலையில், ‘பிலிப் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் ஹாரி கலந்து கொள்ள மாட்டார்’ என, அவரது செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார். இது மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ”ஹாரி, தன் தாத்தாவை அவமதிப்பதாக நினைத்து பாட்டி எலிசபெத்தை அவமதிக்கிறார்,” என, பக்கிங்ஹாம் அரண்மனை செய்தி தொடர்பாளர் ஆஞ்சலா லெவின் கூறியுள்ளார்.
ஹாரி, இரு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டன் அரச வாழ்க்கையை துறந்து வெளியேறினார். தற்போது அமெரிக்காவில் கலிபோர்னியாவில் மனைவி, குழந்தைகளுடன் வசிக்கும் ஹாரிக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை பிரிட்டன் அரசு நீக்கி விட்டது.இந்நிலையில் பிரிட்டன் வந்தால் பாதுகாப்பு இருக்காது எனக் கருதியே, பிலிப் நினைவஞ்சலி நிகழ்ச்சியை ஹாரி புறக்கணிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Advertisement