புதுச்சேரி, : புதுச்சேரி சட்டசபையில் இம்மாத இறுதியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்திற்கு முழு பட்ஜெட்டை, மார்ச் மாத இறுதிக்குள் தாக்கல் செய்வது மரபு. முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய அரசுக்கு காலம் போதாமல் இருந்தால், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.பெரும்பாலும், பொதுத் தேர்தல் காரணமாக, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
தேர்தலுக்கு பிறகு வரும் புதிய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். ஆனால், என்ன காரணத்தினாலோ, புதுச்சேரி சட்டசபையில் கடந்த 2011ம் ஆண்டில் இருந்து மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட்டும், அடுத்த சில மாதங்களில் முழு பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற என்.ஆர்.காங்.,-பா.ஜ., கூட்டணி அரசின் முதல்வர் ரங்கசாமி, கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி முழு பட்ஜெட் தாக்கல் செய்தார். வரும் நிதி ஆண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இருப்பினும், இந்தாண்டும் இம்மாத இறுதிக்குள் இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்பட உள்ளது.
காரணம், புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அரசு, ஜி.எஸ்.டி., மானிய இழப்பீடு தொகையாக ஆண்டிற்கு ரூ.1,500 கோடி வழங்கி வருகிறது. இந்த மானிய இழப்பீடு தொகை வழங்கும் காலக்கெடு வரும் ஜூன் மாதத்துடன் முடிகிறது. இந்த மானிய இழப்பீட்டு தொகையை கொண்டே அரசு பட்ஜெட் தாக்கல் செய்து வந்தது.வரும் ஏப்ரல் மாதம் மத்திய அரசு கூட்டவுள்ள ஜி.எஸ்.டி., கவுன்சிலில் எடுக்கும் முடிவை அறிந்த பிறகே, புதுச்சேரி அரசு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.
Advertisement