மாஸ்கோ: ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடை தொடர்ந்தால், அது சர்வதேச விண்வெளி நிலையம் ஆபத்துக்குள்ளாக வழிவகுக்கும் என ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய விண்வெளி நிறுவனத்தின் இயக்குநர் டிமிட்ரி ரோகோசின், “உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு முந்தைய பொருளாதாரத் தடைகள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் செயல்பட்டு வரும் ரஷ்ய விண்வெளி சார்ந்த செயல்பாடுகளை பாதிக்கலாம். இதனால் விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து நேரிடலாம்.
விண்வெளி குப்பைகளைத் தவிர்ப்பது உள்பட சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பதையை சரி செய்து நிலைநிறுத்தி, அதனை உறுதிப்படுத்தும் பணிகளை, அங்கு செயல்பட்டு வரும் ரஷ்ய பிரிவு செய்து வருகிறது. தற்போது ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளால் அந்தப் பணிகள் பாதிக்கப்படலாம். இதனால், 500 டன் விண்வெளி நிலைய கட்டமைப்புகள் கடலிலோ அல்லது நிலத்திலோ விழ வாய்ப்பிருக்கிறது.
எங்கள் மீதான சட்டவிரோதனமான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என நாசா, கனடா விண்வெளி நிறுவனம், ஐரோப்பிய விண்வெளி கழகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
மேலும், சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) கீழே இறங்கக் கூடிய இடங்களின் வரைபடங்களை வெளியிட்டுள்ள அவர், ”அவை ரஷ்யாவில் இருக்க வாய்ப்பில்லை. மற்ற நாடுகளின் மக்கள் மற்றும் போரைக் கண்காணித்து வருபவர்கள் இந்தப் பொருளாதாரத் தடைகளின் விலைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும்” என்றார்.
பனிப்போருக்கு பின்னர் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து சர்வதேச விண்வெளி நிறுவனத்தில் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
முன்னதாக, கடந்த மார்ச் 1-ம் தேதி, ரஷ்யாவின் உதவியின்றி சர்வதேச விண்வெளி நிறுவனத்தை நிலைநிறுத்துவது குறித்து தீர்வு காணப்படும் என நாசா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.