பைத்தியக்கார மனிதருக்கு பதிலளிக்க முடியாது- மம்தா பானர்ஜிக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் தலைவர்

கொல்கத்தா:
5 மாநில தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்வி குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி கூறுகையில், “காங்கிரஸ் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது, காங்கிரசை நம்பி இருக்க முடியாது” என்று தெரிவித்திருந்தார். 
மேலும் பாஜகவை எதிர்த்து போராட விரும்பும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், காங்கிரஸ் கட்சி விரும்பினால் 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் இணையலாம் என்றும் மம்தா அழைப்பு விடுத்தார்.
மம்தாவின் இந்த கருத்துக்கு மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பதிலடி கொடுத்ததுடன், மம்தாவை கடுமையாக சாடி உள்ளார்.
மம்தா பானர்ஜி
“பைத்தியக்காரத்தனமான மனிதருக்கு பதிலளிப்பது சரியாக இருக்காது. காங்கிரசுக்கு நாடு முழுவதும் 700 எம்எல்ஏக்கள் உள்ளனர். மம்தா பனர்ஜி அத்தனை எம்எல்ஏக்களை கொண்டுள்ளாரா? எதிர்க்கட்சிகள் பெற்ற மொத்த வாக்குப்பகிர்வு சதவீதத்தில், 20 சதவீதம்  காங்கிரஸ் வசம் உள்ளது. மம்தாவிடம் இருக்கிறதா?
அவர் பாஜகவை மகிழ்விப்பதற்காக இப்படிச் சொல்கிறார். மேலும், அவர் பாஜகவின் ஏஜெண்ட் போல செயல்படுகிறார். தேர்தல் கூட்டணி தொடர்புடைய கருத்துக்களை பேச வேண்டும் என்பதற்காக அவர் இதுபோன்ற கருத்துக்களை கூறி வருகிறார்.
காங்கிரசுக்கு எதிராக ஏன் கருத்து கூறுகிறீர்கள்? காங்கிரஸ் இல்லையென்றால் மம்தா பானர்ஜி போன்றவர்கள் பிறந்திருக்க மாட்டார்கள். அவர் இதை நினைவில் கொள்ள வேண்டும். பாஜகவை மகிழ்விக்க கோவா சென்று காங்கிரசை தோற்கடித்தீர்கள். கோவாவில் காங்கிரசை பலவீனப்படுத்தினீர்கள், இது அனைவருக்கும் தெரியும்” என்றும் சவுத்ரி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.