மாஸ்கோ : ரஷ்யாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடை எதிரொலியாக சர்வதேச விண்வெளி நிலையம் செயலிழந்து பூமியை தாக்கக் கூடிய ஆபத்து இருப்பதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச எதிர்ப்புகளை எல்லாம் மீறி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது அடுக்கடுக்கான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இதனால் ரஷ்யாவின் கரன்சி மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் பொருளாதாரம் சரிவு அடைந்துள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ் கோஸ் மோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் எதிரொலியாக நிதிநிலை பாதிக்கப்பட்டு சர்வதேச விண்வெளி நிலையம் செயல் இழக்கக் கூடிய அபாயகரமான சூழல் உருவாகி இருப்பதாக எச்சரித்துள்ளது. பொருளாதார தடைகள், சர்வதேச விண்வெளி நிறுவன கட்டமைப்புக்கு சேவை செய்யும் ரஷ்யாவின் செயல்பாட்டை சீர்குலைக்க செய்யும் என்றும் இதன் விளைவாக சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதையை சரிசெய்ய உதவும் ரஷ்ய தொழில்நுட்பப் பிரிவு பாதிக்கப்படலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதனால் 500 டன் எடையுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தின் கட்டமைப்பு கடலிலோ அல்லது நிலத்திலோ விழும் ஆபத்து உள்ளதாக ரஷ்யா எச்சரித்துள்ளது. எனவே ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் அனைத்தும் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.