தமிழகத்தில் 14-ஆம் தேதி வரை வறண்ட வானிலையும் 15-ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் 16-ஆம் தேதி குமரி, நெல்லை, மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 12 முதல் 14-ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.
15ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 16ஆம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் காலையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM