மார்க்சிஸ்டு புரட்சியாளர் சேகுவேராவை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் மரணம்

லாபாஸ்:
மார்க்சிஸ்ட் புரட்சியாளர் சேகுவேரா. இவர் அர்ஜென்டினாவில் பிறந்தவர். பனிப்போர் காலத்தின்போது பொலிவியா நாடுகளில் அந்த நாட்டு ராணுவத்துக்கு எதிராக கொரில்லா போரில் ஈடுபட்டு வந்தார்.
அவரை அமெரிக்க சி.ஐ.ஏ. அமைப்பினரின் உதவியுடன் பொலிவியா ராணுவம் கடந்த 1967-ம் ஆண்டு கைது செய்தது. காயத்துடன் பிடிபட்ட சேகுவேரா, லா ஷிகுவேரா என்ற கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக்கட்டிடத்தில் இரவு முழுவதும் தங்க வைக்கப்பட்டு இருந்தார்.
கம்யூனிஸ்டுக்கு எதிரான நிலைபாட்டை கொண்டிருந்த அப்போதைய பொலிவியா அதிபர் ரேனே பாரியன்டோஸ், சேகுவேராவை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டார். அதனை நிறைவேற்ற ராணுவ வீரர் மரியோ டெரான் சலாசர் என்பவருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி ராணுவ வீரர் மரியோ, சேகுவேராவை சுட்டுக் கொன்றார்.
இது தொடர்பாக மரியோ அப்போது கூறுகையில், சேகுவேராவை சுட்டுக்கொல்ல முயன்றபோது அவரது ஒளி பொருந்திய கண்களை பார்த்து மிகவும் தடுமாறியதாகவும், அதற்கு சேகுவேரா, நீங்கள் ஒரு மனிதரை கொல்ல போகிறீர்கள். எனவே பதட்டமின்றி செயல் படுங்கள்’ என ஆறுதல் கூறினார் என்றும் தெரிவித்தார்.
30 ஆண்டுகள் பொலிவியா ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மரியோ அதன்பிறகு பத்திரிகையாளர்களின் பார்வையில் இருந்து ஒதுங்கி அமைதியாக வாழ்ந்து வந்தார்.
தற்போது ராணுவ வீரர் மரியாவுக்கு 80 வயதான நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் இவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதை அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.