நேர்மையான ஊடகவியலாளரான மாறன், அவருக்கு எதிராக நடக்கும் சதித் திட்டங்களை எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் ‘மாறன்’ படத்தின் ஒன்லைன்.
மாறனின் தந்தை ஒரு நேர்மையான ஊடகவியலாளராக இருக்க, வழக்கம்போல் அவரை எதிரிகள் கொன்றுவிடுகிறார்கள். அதே திருநாளில்தான் சிறுவனாக இருக்கும் மாறனுக்கு தங்கை பிறக்கிறாள். அப்பாவின் மரணம் என்ற கலவரத்தின் இடையே தாய்க்குப் பிரசவ வலி வர, ‘வீல்’ என்னும் சத்தத்துடன் குழந்தை பிறக்கிறது. ஒட்டுமொத்த குடும்ப பாரமும் மாறன் மேல் விழ வேண்டும் என்றால் என்ன நடந்திருக்கும்? ஆம், அதுவேதான். எவ்வளவோ போராடியும், மாறனின் தாயைக் காப்பாற்ற முடியாததால், அவரும் இறந்துபோய்விடுகிறார். இனி 5 வயது சிறுவனான மாறன்தான், தன் தங்கையையும் காப்பாற்ற வேண்டும். இப்படியாக வளரும் மாறன், பிற்காலத்தில் தந்தையைப் போலவே ஒரு நேர்மையான ஊடகவியலாளராக மாறி, அரசியல்வாதிகளைத் தோலுரித்து அதனால் எழும் பிரச்னைகளைச் சமாளித்து, எப்படித் தன் வாழ்க்கையில் சிறந்து விளங்கினார் என்பதை இரண்டு மணி சினிமாவாக எடுத்திருக்கிறார்கள்.
மாறனாக தனுஷ். மாறனின் சகோதரியாக ஸ்மிருதி வெங்கட். தனுஷ் வழக்கமாகத் தூக்கிச் சுமக்கும் வெயிட்டான ரோலாக இது இல்லாமல், ஒரு வழக்கமான கதையில், வழக்கமான ஹீரோவாகவே வந்து போகிறார். ஸ்மிருதி வெங்கட் பாத்திரம் மட்டுமே கதையில் ஒருவித பாதிப்பைக் கடத்துகிறது. மாளவிகா மோகனன் மென்ற பப்பிள் கம்களைவிட அவருக்கான வசனங்கள் குறைவாகவே இருக்கின்றன. குறைவான காட்சிகளில் வந்தாலும் இயக்குநர் அமீர் தன் பாத்திரத்தைச் சிரத்தையுடன் செய்திருக்கிறார். சமுத்திரக்கனி பழக்கப்பட்ட அரசியல்வாதி வில்லன் பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார். ஆனால், அப்படியான வில்லன்கள் வழக்கமாகச் செய்யும் செயல்களைக்கூடச் செய்யாமல் கடந்து போகிறார். ‘சூரரைப் போற்று’ கிருஷ்ணகுமாருக்கு மட்டும் சற்றே வலிமையான பாத்திரம். ராம்கி, ஆடுகளம் நரேன், ஜெயபிரகாஷ், இளவரசு, யூடியூபர் பிரசாந்த, மாஸ்டர் மகேந்திரன், போஸ் வெங்கட் எனப் பலர் இருக்கிறார்கள். அவ்வளவே!
ஸ்டன்ட் சில்வாவின் இடைவேளை மற்றும் க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சிகள் ஆறுதல். ஒளிப்பதிவிலும், எடிட்டிங்கிலும் விளையாடுவதற்கான ஸ்கோப் கதையிலேயே இல்லை என்னும்போது, அவற்றில் குறை சொல்ல எதுவும் இல்லை. ஜி.வி.பிரகாஷின் பாடல்கள் ஏற்கெனவே கேட்ட ரகம். குறிப்பாக, தங்கைக்காக வரும் பாடல், ‘வி.ஐ.பி.’ படத்தின் அம்மா பாடலை நினைவூட்டுகிறது. ‘போயட்டு’ தனுஷ் புதிதாக யோசிக்கவேண்டிய தருணம் இது.
அமேசான் ப்ரைம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற தளங்களில் 1970 மற்றும் 80களில் வெளியான படங்களையும் அவ்வப்போது பணம் கொடுத்து வாங்கி பிளேலிஸ்ட்டில் சேர்ப்பார்கள். அப்படியானதொரு படமாகத்தான் இருக்கிறது ‘மாறன்’.
முதல் பத்து நிமிடங்களைப் பார்க்கும் பொழுதே, ஏதோ டைம் டிராவல் செய்து எம்.ஜி.ஆர் மற்றும் பழைய ரஜினி படங்களைப் பார்ப்பது போன்ற உணர்வு எட்டிப் பார்க்கிறது. இரண்டாம் பாதியில் ட்விஸ்ட்கள் என்று வைக்கப்பட்டிருக்கும் விஷயங்கள்கூட சுமார் ரகமாகவே இருக்கின்றன. ‘இப்படித்தான் நடந்திருக்கும், இப்படித்தான் நடந்தாகணும்’ என்று ரன்னிங் கமென்டரி அடிக்கும் அளவுக்கு அரதப் பழைய ஃபார்மெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது ‘மாறன்’.
‘துருவங்கள் பதினாறு’ படம் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் நரேன் ‘மாஃபியா’, ‘மாறன்’ எனப் புரிதலற்ற சுமார் ரக பழங்கால மசாலாக்களின் பின்னால் சென்றிருக்கிறார். ‘மாஃபியா’விலாவது கதைக்குத் தேவையில்லா விட்டாலும் மேக்கிங்கில் ஏதோ ஒரு ஸ்டைல் இருந்தது. ‘மாறன்’ படத்தில் அதுவும் இல்லை. ஓடிடி-க்கு இது போதும் என நினைத்துவிட்டார்களா தெரியவில்லை.
ஒரேயொரு கேள்விதான் தனுஷ்… ஏன் இப்படி?