விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள அரசுப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 9-ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை எனத் தெரிகிறது. இதனால் பதற்றமடைந்த மாணவியின் பெற்றோர் பல இடங்களிலும் அவரை தேடிப்பார்த்துள்ளனர். ஆனால், வெகுநேர தேடுதலுக்கு பின்னும் மாணவி கிடைக்காததால் தனது மகள் மாயமானது குறித்து அவரின் பெற்றோர் கீழராஜகுலராமன் போலீஸில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், ராஜபாளையம் சரக துணை காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து மாணவி கடத்தப்பட்டாரா? காதல் பிரச்னையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், வீட்டிலிருந்த செல்போனையும் மாணவி தன்னுடன் எடுத்துச்சென்றிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. உடனே சுதாரித்துக் கொண்ட போலீசார், விருதுநகர் சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் சிறுமியின் செல்போன் சிக்னல்களை கண்டறிந்து அவரை மீட்கும் பணியில் இறங்கினர்.
இதில் சிறுமி திருநெல்வேலியில் இருப்பதாக சமிக்ஞை காட்டியது. தொடர்ந்து, போலீஸார் அங்கு சென்று சிறுமியை மீட்பதற்குள்ளாக, திருநெல்வேலி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பது போலவும், பின் மதுரையிலிருந்து நெய்வேலிக்கும் சிக்னல் பயணித்தது. இதை பின்தொடர்ந்த போலீஸார், நெய்வேலியில் ஆண் ஒருவருடன் நின்றிருந்த சிறுமியை மீட்டு விருதுநகர் அழைத்து வந்தனர். மேலும் சிறுமியுடன் நின்றிருந்த ஆண் நபரை கைது செய்து விசாரித்ததில், அவர் கடலூர் மாவட்டம் பேர்பெரியான்குப்பத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (25) என்பதும், கட்டட நிறுவனமொன்றில் ஊழியராக பணிபுரிவதும் தெரியவந்தது. மேலும், சிறுமியும், அவரும் இரண்டு மாதங்களுக்கு முன்னதாக தான் முகநூல் பக்கம் வழியே ஒருவருக்கொருவர் அறிமுகமாகியுள்ளனர்.
பின்னர் தொடர்ந்து பேசியுள்ள அவர்கள், ஒருத்தரையொருத்தர் காதலித்துள்ளனர். இந்நிலையில் தான், சிறுமியிடம் நைசாக பேசி அவரை நெய்வேலிக்கு தன்னுடன் வருமாறு ரஞ்சித்குமார் அழைத்துள்ளார். காதல் மோகத்திலிருந்த சிறுமியோ, எதைப்பற்றியும் யோசிக்காமல் தன் காதலனுடன் நெய்வேலிக்கு கிளம்பி சென்றுள்ளார். அங்குதான், சைபர் கிரைம் போலீஸில் இருவரும் பிடிப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் சிறுமி மீட்கப்பட்டு சொந்த ஊர் அழைத்துவரப்பட்டதை தொடர்ந்து ரஞ்சித்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பள்ளி மாணவி மாயமான 24 மணி நேரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதையடுத்து பொதுமக்கள், போலீஸை வெகுவாக பாராட்டினர்.