லக்னோ: முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் கர்ஹால் தொகுதியில் வெற்றி பெற்ற அகிலேஷ் யாதவ், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேச தேர்தலில், பாஜககூட்டணி 273 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பாஜக மட்டும் 255 தொகுதிகளைக் கைப்பற்றியது. இது கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் பெற்ற தொகுதிகளை விட குறைவு. அதேநேரத்தில் கடந்த தேர்தலில் குறைந்த தொகுதிகளை கைப்பற்றிய சமாஜ்வாதி கட்சி, இந்தத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 125 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. சமாஜ்வாதி மட்டும் 111 தொகுதிகளை கைப்பற்றியது.
தேர்தல் முடிவுகள் வெளியானதற்கு பிறகு முதல் முறையாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் தனது ட்விட்டரில் கூறுகையில் ‘‘உத்தர பிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு அதிக எண்ணிக்கையையும், அதிக வாக்குகளையும் அளித்த மக்களுக்கு நன்றி. பாஜக.வின் வெற்றி எண்ணிக்கையை குறைக்க முடியும்என்பதை சமாஜ்வாதி நிரூபித்துள்ளது’’ எனத் தெரிவித்தார்.
இந்தநிலையில் முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் கர்ஹால் தொகுதியில் வெற்றி பெற்ற அகிலேஷ் யாதவ் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அசம்கர் மக்களவை உறுப்பினராக இருக்கும் அவர் இரண்டில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும். அகிலேஷ் மக்களவை எம்.பி.யாக நீடிக்கவே விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அகிலேஷ் யாதவ் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால், அவர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்க மாட்டார் என தெரிகிறது.
இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:
“இப்போது நாங்கள் உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெறவில்லை. அரசு அமைக்கவில்லை. கட்சித் தலைவர் அகிலேஷ் கர்ஹால் தொகுதியை விட்டு மக்களவை எம்.பி.யாகவே தொடர அதிக வாய்ப்புண்டு. எனினும் இந்த விஷயத்தில் அதிகாரப்பூர்வமாக முடிவு எடுக்கவில்லை. ஆனால் விரைவில் முடிவு எடுக்கப்படும். கட்சி சரியான நேரத்தில் அறிவிப்பை வெளியிடும்’’ எனக் கூறினார்.
2002, 2007, 2012 மற்றும் 2017 சட்டப்பேரவைத் தேர்தல்களில் கர்ஹால் தொகுதியில் இருந்து சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் சோபரன் சிங் யாதவ் வெற்றி பெற்றார். 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் தலைவர் அகிலேஷ் யாதவுக்காக தொகுதியை விட்டுக் கொடுத்தார். இடைத்தேர்தல் நடந்தால் கட்சியின் வேட்பாளராக மீண்டும் அவர் நிறுத்தப்பட வாய்ப்புண்டு.
சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக கருதப்படும் மெயின்புரி மக்களவைத் தொகுதியில் கர்ஹால் இடம் பெற்றுள்ளது. நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கர்ஹால் தொகுதியில் அகிலேஷ் யாதவ், பாஜக எம்பி எஸ்பி சிங் பாகேலை 67,504 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.