சென்னை:
சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஜெயக்குமார் மனுதாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 11-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதையடுத்து நேற்று ஜெயக்குமார் ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
திருச்சியில் 2 வாரங்கள் தங்கியிருந்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். திருச்சியில் இருந்து வந்த பின் வாரந்தோறும் திங்கட்கிழமை விசாரணை அதிகாரி முன் ஆஜராகவேண்டும் என ஜெயக்குமாருக்கு நிபந்தனைவிதிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே 2 வழக்குகளில் ஜாமீன் பெற்றுள்ள நிலையில், நேற்று 3-வது வழக்கிலும் ஜாமீன் பெற்றுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார், சென்னை புழல் சிறையில் இருந்து இன்று காலை விடுதலை செய்யப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொய் வழக்கு போட்டு என்னை சிறையில் தள்ளியது தி.மு.க. அரசு. தேர்தலின் போது கள்ள ஓட்டு போட முயன்ற தி.மு.க.வினரை தடுத்ததால் கைது செய்யப்பட்டேன் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்…வரும் 15-ந் தேதி முதல் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி