உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் உறுதியாக வெற்றி பெற மாட்டார் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் ஹவுஸ் டெமாக்ரடிக் காகஸ் உறுப்பினர்களிடம் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி “உக்ரைனில் மூன்றாம் உலகப் போரை நடத்தவில்லை” ஆனால் நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் நாங்கள் பாதுகாப்போம் என உறுதியளித்துள்ளார்.
அந்தவகையில் ரஷ்யாவின் அண்டை நாடுகளான லாட்வியா, எஸ்டோனியா, லித்துவேனியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளுக்கு 12000 அமெரிக்கா ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் தாக்குதலை துணிச்சலாக எதிர்த்து உக்ரைன் மக்கள் தங்களின் தைரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர், ரஷ்யாவின் இந்த அத்துமீறிய ஆக்கிரமிப்பு செயலுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகள் விதித்ததன் மூலம் உலக நாடுகளின் மத்தியில் ரஷ்யா தனிமைப்படுத்தபட்டுவிட்டதாகவும் வரலாறு காணாத அளவுக்கு ரஷ்ய ரூபிள் பாதிக்கும் குறைவான மதிப்பை தொட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
இதைப்போலவே ரஷ்யாவிற்கு எதிரான அனைத்து பொருளாதார தனிமைப்படுதலை முன்னகர்த்தி உக்ரைன் மக்களுக்கு அமெரிக்கா துணை நிற்கும், அதேசமயம் உக்ரைன் மக்களுக்கு தேவையான பிற உதவிகளையும் செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யா போர் தொடுப்பதன் மூலம் நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளின் ஒற்றுமையை சீர்குலைத்து விடலாம் என கருதிய ஜனாதிபதி புதின் எண்ணம் தற்போது அழிக்கப்பட்டு உள்ளது.
நேட்டோ அமைப்பில் உள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் நாங்கள் வலிமையை காட்டுகிறோம், நாங்கள் ஒருபோதும் தளர்ந்துவிட மாட்டோம். உக்ரைனுக்கு எதிரான புடினின் போர் ஒருபோதும் வெற்றியாக இருக்காது.” எனவும் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.