கீவ்: ”உங்கள் மகன்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று ரஷ்ய தாய்மார்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை தொனியில் அறிவுறுத்தியுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 17-வது நாளாகத் தொடரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தில் சாதாரண குடிமக்களும் பணியமர்த்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி தனது டெலிகிராம் பக்கத்தில், ”ரஷ்யத் தாய்மார்களுக்கு நான் இதனை மீண்டும் சொல்ல விரும்புகிறேன். உங்கள் பிள்ளைகளை வேறு நாட்டில் சண்டையிட அனுப்பாதீர்கள். உங்கள் மகன்கள் எங்கிருக்கிறார்கள் என்று உடனே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒருவேளை அவர்கள் உக்ரைனுக்கு வந்திருந்தால் கொல்லப்படலாம் அல்லது சிறைப்பிடிக்கப்படலாம். உக்ரைன் இந்தப் போரை விரும்பவில்லை. ஆனால், எங்கள் நாட்டைப் பாதுகாக்க நாங்கள் தேவையான நடவடிக்கையை எடுப்போம்” என்றார்.
முன்னதாக, சாதாரண நபர்கள் உக்ரைன் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரஷ்யாவும் தெரிவித்தது. ஏற்கெனவே ஒரு முறை உக்ரைன் அதிபர், ரஷ்ய தாய்மார்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். ”உக்ரைனுக்கு வந்து உங்கள் மகன்களை அழைத்துச் செல்லுங்கள்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது எச்சரிக்கை தொனியில் கூறியுள்ளார்.
உக்ரைன் மீதான தாக்குதலை நாளுக்கு நாள் கடுமையாக்கி வருகின்றன ரஷ்யப் படைகள். இன்று (சனிக்கிழமை) மரியுபோலில் ஒரு மசூதியைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த மசூதியில் 80 பேர் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், அங்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷ்யா தொடர்ந்து பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. அதேபோல், கீவ் நகரின் வாசில்கிவ் எனும் பகுதியில் உள்ள விமானப்படை தளத்தையும் ரஷ்யா முழுவதுமாக தகர்த்துள்ளது. கீவ் நகரை கைப்பற்ற ரஷ்யா தாக்குதலை துரிதப்படுத்தியுள்ளது.