கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த முறையும் பல உச்சபட்ச நாடகங்களை எதிர்பார்க்கலாம் என்பதே அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. கோவா மாநிலத்தில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆளும் பாஜகவும் காங்கிரஸும் சமமான இடங்களை பெறக்கூடும். எனினும் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்படக்கூடும் என்றுதெரிகிறது.
அதேநேரம் இதர கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிகிறது. கோவாவில் தொங்கு சட்டப்பேரவையே ஏற்படும் என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பால் ஆட்சியமைக்கும் நடவடிக்கையை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது. கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி சென்று சந்தித்தார்.
ரிசார்ட்டுகளில் எம்எல்ஏ.,க்கள்: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரையும் பாதுகாக்கும் பொருட்டு அவர்கள் அனைவரும் வடக்கு கோவாவில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். காங்கிரஸை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியும் தனது வேட்பாளர்களை பாதுகாப்பாக வெவ்வேறு இடங்களில் தங்க வைத்துள்ளது. ஆம் ஆத்மி பெரிய அளவில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றாலும் கூட ஒரு சில எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றாலும் அவர்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவும், காங்கிரஸும் முயற்சி மேற்கொண்டுள்ளன. இதனால் தங்கள் வேட்பாளர்களை பாதுகாப்பாக வைக்கும் நடவடிக்கையை ஆம் ஆத்மி எடுத்துள்ளது.
கிங் மேக்கர் திரிணமூல்: கருத்துக் கணிப்புகள் சில, மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸுக்கு மூன்று இடங்கள் கிடைக்கும் எனக் கூறியுள்ளன. இதனால் திரிணமூல் காங்கிரஸ் கிங் மேக்கராகக் கூடும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் இன்று காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதல்வர் பிரமோத் சாவந்த், ஸ்ரீதத்தா கோயிலில் வேண்டுதல் செய்தார். மனோகர் பாரிக்கர் முதல்வராக இருந்தபோது தேர்தல் முடிவு நாளில் இதுபோல் செய்வது வழக்கமாம் அதே பழக்கத்தைப் பின்பற்றி சாவந்தும் கோயிலுக்குச் சென்றுள்ளார்.