புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கிள்ளுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராகிணி (32). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, இயந்திர வேலை பார்த்துக்கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவரது வலது கை துண்டாகியது. உடனடியாகத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிர் பிழைக்க வைத்துவிட்டனர்.
ஆனாலும், வலது கையை இழந்து 20 ஆண்டுகளாகச் சிரமப்பட்டுக்கொண்டிருந்த ராகிணிக்கு, புதுக்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் இப்போது செயற்கை கை பொருத்தப்பட்டு, அவரது பல்லாண்டு துன்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர் மருத்துவர்கள்.
இதுபற்றி மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதியிடம் பேசினோம். “முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டம் மூலம் செயற்கை கை இலவசமாக வரவழைக்கப்பட்டு, உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வுத்துறை பிரிவு மூலமாக மருத்துவர்கள் கீதா, பத்மராணி மற்றும் மருத்துவக் குழுவினர் இணைந்து ராகிணிக்கு செயற்கை கையைப் பொருத்தினர். தொடர்ந்து, அவருக்கு கையை மடக்குவதற்கு,பொருள்களை எடுப்பதற்கான பயிற்சிகளும் மருத்துவர் குழு சார்பில் அளிக்கப்பட்டன.
இந்த செயற்கை கையைத் தனியார் மருத்துவமனையில் பொருத்துவதற்கு ரூ. 2 லட்சம் செலவாகும். இதனை முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாகச் செய்திருக்கிறோம்” என்றார்.