தேசிய அளவில் புதிய மாற்று சக்தியாக
ஆம் ஆத்மி
உருவெடுத்துள்ளது. எங்களது துடைப்பம் மொத்த அரசியலையும் தூய்மைப்படுத்த பயன்படுத்தப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் கூறியுள்ளார்.
டெல்லியில் மட்டுமே இருந்து வந்த ஆம் ஆத்மி அரசு இப்போது பஞ்சாபிலும் அமைந்துள்ளது. பல்வேறு சாதனைகளுடன் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த நிலையில் தங்களது பஞ்சாப் வெற்றியை உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரமாண்டமாக கொண்டாடத் திட்டமிட்டுள்ளது ஆம் ஆத்மி கட்சி.
உ.பி. முழுவதும் வெற்றிப் பேரணிகளை நடத்த ஆம் ஆத்மி கட்சி முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து சஞ்சய் சிங் கூறுகையில், பஞ்சாப்பில் எங்களுக்குக் கிடைத்துள்ள வெற்றியின் மூலம், மக்கள் எங்களை தேசிய சக்தியாக அங்கீகரித்துள்ளதை உணர்கிறோம். எங்களது துடைப்பத்தின் மூலம் அரசியலை சுத்தப்படுத்தப் போகிறோம்.
உ.பியில் அனைத்து கிராமங்களிலும் எங்களது கட்சியின் கிளைகள் நிறுவப்படும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதை நாங்கள் உறுதி செய்வம். இதுதொடர்பான பணிகள் விரைவில் தொடங்கப்படும். மார்ச் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மாவட்ட மற்றும் மாநில செயற்குழுக் கூட்டங்கள் கூட்டப்படும். உ.பி. தேர்தலில் கட்சியின் செயல்பாடு குறித்து அப்போது ஆலோசிக்கப்படும். கட்சியை மாநிலத்தில் மேலும் விஸ்தரிக்கத் தேவையான நடவடிக்கைகளையும் நாங்கள் முடிவு செய்யவுள்ளோம் .
உ.பியில் பாஜகவுக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் இடையேதான் நேரடி போட்டி இருந்தது. பிற கட்சிகளுக்கு அங்கு இடமில்லாமல் போய் விட்டது. இதனால்தான் ஆம் ஆத்மி கட்சியும் வெற்றி பெற முடியவில்லை என்றார் சஞ்சய் சிங். 5 மாநில சட்டசபைத் தேர்தலில் உ.பியில்தான் ஒரு இடத்திலும் ஆம் ஆத்மி வெல்லவில்லை. அதேசமயம், கோவாவில் இந்தக் கட்சிக்கு 3 இடங்களில் வெற்றி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாபில் 60 ஆண்டு கால சாதனையையும் அது முறியடித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி உ.பியில் 403 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியிலும் அது வெற்றி பெறவில்லை. உ.பி. தேர்தலில் பாஜக 255 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சிகளான அப்னா தளம் எஸ் 12 இடங்களையும், நிஷாத் பார்ட்டி 6 தொகுதிகளையும் வென்றன. சமாஜ்வாதிக் கட்சிக்கு 111 இடங்களில் வெற்றி கிடைத்தது. அதன் கூட்டணிக் கட்சியான சுலேதேவ் பாரதிய சமாஜ் கட்சிக்கு 6 சீட்டுகளும், ராஷ்டிரிய லோக்தளம் கட்சிக்கு 8 சீட்டுகளும் கிடைத்தன. காங்கிரஸ், ஜன் சத்தா தளம் ஆகியவற்றுக்கு தலா 2 சீட்டுகளும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடமும் கிடைத்தது.