வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சந்தையில் பயிற்சிபெற்ற பணியாளர்களுக்கான வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் குறித்த தொழில்சார் திறன்கள், அதிக சம்பளம் மற்றும் தொழில் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
பத்தரமுல்லை, கொஸ்வத்தை, டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைமை அலுவலகத்திற்கு நேற்று (11) முற்பகல் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
உள்நாட்டு பொருளாதாரத்திற்கு பங்களித்து, அனைத்து தரப்பினரதும் நலன்களை பாதுகாக்கும் அதேவேளையில், வெளிநாட்டு தொழில் சந்தையின் சிறந்த பலன்களை மக்கள் தங்கள் திறமைக்கு ஏற்ப பெற்றுக்கொள்ளக்கூடிய திறமையான மற்றும் சமமான வழிகளை உருவாக்குவதே “இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின்” பணியாகும்.
- வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சந்தையில் பயிற்சிபெற்ற தொழிலாளர்களுக்கான வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்…
- பணியகச் சட்டத்தை மீறிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை…
வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குதல், வெளிநாடு செல்வோரின் பயிற்சி மற்றும் பதிவு செய்தல், சமரசம், நலன்புரி, சட்ட விவகாரங்கள், சந்தைப்படுத்தல் மற்றும் ஆராய்ச்சி ஆகியவை நிறுவனத்தின் முக்கிய செயற்பாடுகளாகும்.
திறமையான மற்றும் பயிற்சிபெற்ற பணியாளர்களைக் கண்டறிவது என்பது, உலகெங்கிலும் உள்ள தொழில் வழங்குனர்கள் மற்றும் வேலைவாய்ப்பு முகவர்கள் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாகும். இத்தகைய பின்னணியில், திறமையான, நேர்மையான மற்றும் பயிற்சிபெற்ற தொழிலாளர்களை வழங்குவதற்கான புகலிடமாக இலங்கை நற்பெயரைப் பெற்றுள்ளது.
இலங்கை மருத்துவம், பொறியியல், கணக்கியல், கட்டிடக்கலை, கற்பித்தல், சட்டம், வங்கியியல், ஹோட்டல் மற்றும் உணவகம், தாதியர் மற்றும் கணினி உட்பட பல்வேறு துறைகளில் பயிற்சிபெற்ற பணியாளர்களைக் கொண்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக நிபுணத்துவம் வாய்ந்த மற்றும் திறமையான தொழிலாளர்களை வழிநடத்தும் தேசிய வேலைத்திட்டத்தில் பணியகம் அடைந்துள்ள முன்னேற்றங்கள் ஜனாதிபதி அவர்களின் அவதானத்துக்கு கொண்டு வரப்பட்டது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பின் மூலம் பெறப்படும் பரிமாற்றங்களினால் தேசிய வருமானத்திற்கு உயர் நிதி மாற்று விகித பங்களிப்பு கிடைப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
தொழில் நிமித்தம் வெளிநாடு செல்லும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் பணி இடங்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விரைவாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி அவர்களின் விசேட கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு உரிமம் பெற்றவர்களின் பொறுப்புகள் உரிய முறையில் நிறைவேற்றப்படுகின்றதா என ஜனாதிபதி அவர்கள், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தை மீறிய முகவர்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக 2,832 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அவர்களை உடனடியாக கறுப்புப் பட்டியலில் ஆவணப்படுத்தி, சட்டத்தை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.
வெளிநாட்டுத் தொழிலாளர் சமூகம் மற்றும் பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குதல் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட 24 மணி நேரமும் செயற்படுகின்ற, தகவல் சேவை குறித்து ஜனாதிபதி அவர்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அந்த நாடுகளில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தூதரகங்களில் உள்ள தொழிலாளர் நலன்புரி பிரிவுகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் விசேட கவனம் செலுத்தினார்.
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களின் பங்களிப்புடன் நாடளாவிய ரீதியில் உள்ள தொழில் சந்தைத் தொடர்பில் பொதுமக்களை அறிவூட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக பணியகத்தை ஜனாதிபதி அவர்கள் பாராட்டினார்.
பணியக கட்டிடத்திலுள்ள அனைத்து பிரிவுகளையும் பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், அதிகாரிகளை ஊக்குவித்ததோடு, சேவைகளை பெற்றுக்கொள்ள வந்திருந்த மக்களிடமும் விபரங்களைக் கேட்டறிந்துகொண்டார்.
தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, அமைச்சுக்களின் செயலாளர்கள், பணியகத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
11.03.2022