நான் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். என் கணவருக்கு மருந்து நிறுவனம் ஒன்றில் வேலை. எங்கள் மகன் ஒன்றாம் வகுப்புப் படிக்கிறான். கொரோனா பொதுமுடக்க சூழலில் ஆன்லைனிலேயே வகுப்புகள் நடந்த நிலையில், இப்போது பள்ளி திறந்து நேரடி வகுப்புக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறான். இந்நிலையில், பள்ளியில் அவன் ஆசிரியர்கள், நான் வேலைக்குச் செல்வதால் குழந்தையை சரியாக கவனித்துக்கொள்வதில்லை என்று புகார் சொல்ல ஆரம்பித்திருப்பது எனக்கு மனஉளைச்சல் தர ஆரம்பித்திருக்கிறது.
எனக்கு இப்போது 28 வயதாகிறது. என் பிரசவத்துக்கு முன்வரை பணிக்குச் சென்றுகொண்டிருந்த நான், மகன் பிறந்தபோது வேலையை விட்டேன். அவனை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். பின்னர், ஒரு நல்ல ஆஃபர் வந்தது; மகனுக்கும் பள்ளிக்குச் செல்லும் வயது வந்தது. எனவே, நான் வேலைக்குச் செல்லத் தீர்மானித்தேன். மகனைப் பள்ளியில் சேர்த்தாலும், பின்னர் கொரோனாவால் வகுப்புகள் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டதால், வீட்டில் அவனுக்குத் துணைக்கு இருப்பதற்காக என் அம்மாவை ஊரிலிருந்து வரவழைத்தேன்.
நானும், கணவரும் அலுவலகம் செல்ல, மகனை வீட்டில் அம்மா பார்த்துக்கொண்டார். என்றாலும், அம்மாவால் மகனுக்கு முழுமையாக ஆன்லைனில் வகுப்பில் கனெக்ட் ஆகவோ, டெக்னிக்கல் பிரச்னைகளிலோ உதவ முடியாது. தன்னால் முடிந்தவரை ஒரு மேற்பார்வையாளராக இருந்து அவன் வகுப்பை அட்டண்ட் செய்வதைப் பார்த்துக்கொண்டார். மாலை நான் வந்து, அன்று அவனுக்கு ஆன்லைனில் நடத்திய பாடங்களைக் கேட்டறிவது, ஹோம்வொர்க் சொல்லிக்கொடுப்பது என்று வழக்கமாக்கினேன். என்றாலும், ஆன்லைன் வகுப்புகளில் அருகிலேயே அமர்ந்து, `இந்த பதிலை சொல்லு’, `இந்தக் கேள்வியைக் கேளு’ என்றெல்லாம் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்த ஹோம்மேக்கர் அம்மாக்களைப்போல, என் மகனுக்கு என்னால் முழுமையாக சப்போர்ட் செய்ய முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
இந்நிலையில், பள்ளி திறந்த பின்னர் மகன் வகுப்புக்குச் செல்ல ஆரம்பித்தான். ஆனால், அவன் பள்ளியில் ஆசிரியர்கள், பணிக்குச் செல்லும் அம்மாக்கள் பாடங்கள், ஹோம்வொர்க் எனக் குழந்தைகளை சரிவர கவனிப்பதில்லை என்ற புகாரை மீண்டும் மீண்டும் சொல்லி, என்னையும், என்னைப் போன்ற பிற அம்மாக்களையும் குற்ற உணர்வுக்கு ஆளாக்கி வருகின்றனர்.
சமீபத்தில் பேரன்ட்ஸ் மீட்டிங்கில் நடந்தது, உச்சம். `வேலைக்குப் போற அம்மாக்கள், உங்க பிள்ளைகளுக்காகத்தான் வேலைக்குப் போறீங்கனு புரிஞ்சுக்கோங்க. நாங்க போர்ஷனை முடிக்கிற நெருக்கடியில இருக்கோம். ஆனா, உங்க பிள்ளைங்க ஒழுங்கா ஹோம்வொர்க் செய்துட்டு வர்றதில்லை. மேலும், புராஜெக்ட்ஸ் வொர்க்கும் ஒழுங்கா செய்றதில்ல’ என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போனார்கள். ஏதோ எங்களை குற்றவாளிகள் போலப் பேசினார்கள்.
மேலும், `குழந்தை ரெஸ்ட் ரூமுக்கு போக பெர்மிஷன் கேட்க பயப்புடுது, கொஞ்சம் ஃப்ரெண்ட்லியா ஹேண்டில் பண்ணுங்க’ என்று நான் மீட்டிங்கில் சொன்னபோது, `நீங்க முதல்ல அவனுக்கு அளவா தண்ணி கொடுத்துவிடுங்க. வொர்க்கிங் மாம்ஸ் கொஞ்சம் உங்க பசங்களோட லன்ச் பாக்ஸ், ஸ்நாக்ஸ் பாக்ஸ்ல எல்லாம் கவனம் செலுத்துங்க’ என்று, தங்கள் மீதான புகாரையும் எங்கள் மீதே திருப்பிய அணுகுமுறையையும் கவனித்தேன்.
வேலைக்குச் சென்று வீடு திரும்பும் நானும், என்னைப் போன்ற சக அம்மாக்களும், முடிந்தவரை பிள்ளைகளை ஹோம்வொர்க் செய்ய வைக்கிறோம். ஹோம்மேக்கர் அம்மாக்களை போல எங்களால் 100% பெர்ஃபெக்ட் ஆக குழந்தையை ஃபாலோ செய்ய முடியாதுதான். எங்களால் 80% கவனமே கொடுக்க முடிகிற சூழலை அசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், புராஜெக்ட்ஸ் என்ற பெயரில், தினமும் அவர்கள் சொல்லும் கட்டிங், பேஸ்ட்டிங், கலெக்டிங் வேலைகள், அதற்கான பொருள்களை எல்லாம் வாங்க எங்களுக்கு நேரமும் இருப்பதில்லை. முடிந்தவரை முடித்துக்கொடுத்து அனுப்புகிறோம்.
இந்நிலையில், சமீபத்தில் எனக்கு போன் செய்து என்னைப் பள்ளிக்கு அழைத்திருந்தனர் ஆசிரியர்கள். என்னைப் போலவே இன்னும் இரண்டு அம்மாக்களும் அழைக்கப்பட்டிருந்தனர். மூவருமே வொர்க்கிங் மாம்கள். `உள்ளதே ஆன்லைன் க்ளாஸால பிள்ளைங்க பாடத்துல ரொம்ப பின்தங்கியிருக்காங்க. இப்போ ஸ்கூல் திறந்ததுக்கு அப்புறம், அவங்களை விட்டதை எல்லாம் படிக்க வைக்கிற கட்டாயத்துல நாங்க இருக்கோம். ஆனா, உங்க பிள்ளையைப் பத்தி நீங்க பொறுப்பில்லாம இருக்கீங்க. ஆல்ஃபபெட்ஸ், நியூமரல்ஸ்னு உங்க பசங்க நிறைய பின்தங்கியிருக்காங்க. பிள்ளைக்காகத்தானே வேலைக்குப் போறீங்க? என்ன செய்வீங்களோ தெரியாது… ஒரு மாசத்துக்குள்ள எல்லாத்தையும் படிக்க வெச்சிடுங்க’ என்று எங்களிடம் பேசினார்கள். நாம் வேலைக்குச் செல்வதால் பேரன்டிங்கில் கோட்டைவிடுகிறோமோ என்ற குற்றஉணர்வை நிரப்பி எங்களை அனுப்பிவைத்தார்கள்.
எனக்குத் தெரிந்த, வெளியூரில் இருக்கும் பள்ளி ஒன்றில், வொர்க்கிங் மாம்களை மட்டும் அழைத்து, `நீங்க வொர்க் – லைஃப் பேலன்ஸ்ல கஷ்டப்படுவீங்க, அதிலும் இந்த கொரோனா சூழல்ல இன்னும் சிரமப்படுவீங்கனு எங்களுக்குப் புரியுது. வொர்க்கிங் மாம்களுக்கு மட்டும் ஒரு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பிக்கிறோம். அவங்களுக்கான கம்யூனிக்கேஷன்கள் மிஸ் ஆகாம பார்த்துக்க நாங்க சப்போர்ட்டிவ்வா இருக்கோம். என்ன ஹெல்ப்னாலும் எங்ககிட்ட கேளுங்க’ என்று சொல்லி, அவர்கள் இந்தக் கடினமான சூழலைக் கடக்க உதவுகிறார்கள். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் பணிக்குச் செல்லும் அம்மாக்களை கண்டிப்புடனே அணுகுகிறார்கள்.
சொல்லப்போனால், ஆசிரியர் வேலையில் இருக்கும் அவர்களும் எங்களைப் போன்ற வொர்க்கிங் மாம்கள்தானே? எங்கள் சிரமங்கள் அவர்களுக்குப் புரியாதா? குடும்பத்தின் பொருளாதாரத்துக்கு பெண்கள் பங்களிக்க ஆரம்பித்திருப்பது அதிகரித்து வரும் நிலையில், இப்படி வொர்க்கிங் மாம்களை, வேலைக்குச் செல்வதாலேயே அவர்கள் குழந்தைகளை ஒழுங்காகப் பார்த்துக்கொள்வதில்லை என்ற கண்ணோட்டத்தில் அணுகுவதை பள்ளி, வீட்டுப் பெரியவர்கள், சமூகம் மாற்றிக்கொண்டு, எங்களைப் புரிந்துகொள்வது எப்போது? அல்லது, இவர்களை நாங்கள் கையாள்வது எப்படி?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே… இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். [email protected] என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.