புதுடெல்லி:
மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, பீகார், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தில் காலியாக உள்ள அசன்சால் நாடாளுமன்ற தொகுதி, பாலிகங்கே சட்டமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 12ல் இடைத்தேர்தல் நடத்தப்படும். இதேபோல் மகாராஷ்டிராவின் கோலாப்பூர் வடக்கு, பீகாரில் உள்ள போச்சகன், சத்தீஸ்கரில் உள்ள கைராகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 12ல் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 17ம் தேதி தொடங்கி, 24ம் தேதி நிறைவடைகிறது. மார்ச் 25ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை திரும்ப பெறுவதற்கு மார்ச் 28ம் தேதி கடைசி நாள் ஆகும். ஏப்ரல் 12ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏப்ரல் 16ல் வாக்குகள் எண்ணப்பட்டு இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.