தெலங்கானாவில் அடுத்த 5 ஆண்டுகளில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்படையும் என ஆய்வில் தெரிய வந்திருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானாவில் ஒவ்வொரு மாதமும் 20 முதல் 40 வயதுக்கு உள்பட்ட 15 முதல் 20 பேர் தீவிர சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகி நோயாளிகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக தெலங்கானாவின் சிறுநீரக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாவோர் 20 முதல் 40 வயதுக்கு உள்பட்ட இள வயதினராக இருப்பதால், ஆரம்பநிலையில் பாதிப்புகளை கண்டறிய முடிவதில்லை எனவும், இதனால் மோசமான பாதிப்பு நிலையை அடைந்த பிறகே மருத்துவமனைக்கு வருவதால் கடும் சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடுவதாகவும் மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இளம் வயதிலேயே சிறுநீரக பாதிப்பு ஏற்படுவோருக்கு குறிப்பிட்ட அறிகுறிகள் எதுவும் தென்படாமல் பொதுவான உடல் சோர்வு மற்றும் வலி, பசியின்மை ஆகியவையே அறிகுறிகளாக உள்ளன. இதனால், 70% பாதிப்புகளை அடைந்த பின்னரே சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக அவர்கள் மருத்துவப் பரிசோதனைகளின் மூலம் தெரிந்து கொள்கின்றனர்.
கடந்த காலங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக பாதிப்புகள் பரவலாக இருந்து வந்த நிலையில், 30, 40 வயதுடையவர்களிடையே உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன் ஆகியவை கட்டுக்கு அடங்காமல் அதிகரித்திருப்பதே இளம் வயதிலேயே மோசமான சிறுநீரக பாதிப்புகளுக்கு அடித்தளமிட்டுள்ளது. மேலும், இறுதிக்கட்ட சிறுநீரக பாதிப்படையும் போதே தெரிய வருவதால், ஆரம்பக்கால சிகிச்சைகள் இல்லாமலேயே நேரடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கும், டயாலிஸிஸ் செயல்முறைக்கும் வழிவகுப்பதாக தெலுங்கானாவை சேர்ந்த சிறுநீரக மருத்துவ வல்லுநர் ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், இதனால் அடுத்த 4, 5 வருடங்களில் இளம் வயதினரிடையே ஏற்படும் சிறுநீரக பாதிப்புகளின் எண்ணிக்கை இரட்டிப்படையும் நிலையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகவும், டயாலிஸிஸ் செய்து கொள்வதற்காகவும் நோயாளிகள் திண்டாட வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்திருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் பேர் இறுதிக்கட்ட சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெறுவதாகவும், நாடு முழுவதும் ஏறத்தாழ 5,000 டயாலிஸிஸ் மையங்கள் உள்ள நிலையில், சுமார் 3.5 கோடி முறை டயாலிஸிஸ் செயல்முறை செய்யப்படுவதாகவும் தெலங்கானாவில் சமீபத்தில் நடந்த ஆன்லைன் மருத்துவ நிகழ்ச்சி ஒன்றில் தெரிய வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.