புதுடெல்லி: உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், அதிருப்தி தலைவர்கள் 4 பேர் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினர். உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அதனால், மூத்த தலைவர்கள் கட்சி தலைமையில் மாற்றம் தேவை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஓராண்டுக்கு முன்பே காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 23 பேர், கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில், கட்சிக்கு முழு நேர தலைவர் தேவை என்றும், கட்சியில் மாற்றங்கள் அவசியம் என்றும் கோரிக்கை விடுத்தனர். ஆனால், முழு நேர தலைவர் தேர்தல் குறித்து எவ்வித நடவடிக்கையும் காங்கிரஸ் தலைமை எடுக்கவில்லை என்று அதிருப்தி தொடர்ந்து நிலவி வருகிறது. தற்போது 5 மாநில தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தால், மேலும் கட்சியினர் மத்தியில் தலைமை மீது அதிருப்தி அதிகரித்துள்ளது. இந்நிலையில் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் வீட்டில் கட்சியின் அதிருப்தி தலைவர்கள் சிலர் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அவர்களில் முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள் கபில் சிபல், மணீஷ் திவாரி, ஆனந்த் ஷர்மா ஆகியோர் கலந்துரையாடியதாக தகவல்கள் தெரிவித்தன. மேற்கண்ட நான்கு தலைவர்களும் ‘ஜி-23’ தலைவர்களின் குழுவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.