நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலத்திலும் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸைத் தோற்கடித்து ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
ஐந்து மாநிலத்திலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து அக்கட்சி பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஜி23 குழு, தேர்தல் தோல்விக்கான பொறுப்பைச் சரிசெய்ய வேண்டும். எனவே, அவசர கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டது.
இதற்கிடையில், ராஜ்யசபாவின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் வீட்டில், கட்சி எம்.பி.க்கள் கபில் சிபல், மணீஷ் திவாரி ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர். கட்சியின் மோசமான செயல்பாடுகள் மற்றும் எதிர்கால வியூகங்கள் குறித்து அவர்கள் விவாதித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நாளைக் காலை 10:30 மணிக்குக் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகக் குழுக் கூட்டத்துக்குக் கட்சி நிர்வாகிகளை அழைத்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் கட்சி படுதோல்வி அடைந்தது குறித்து ஆலோசிக்கவும், எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் வகுக்கவும் காங்கிரஸ் காரிய கமிட்டி குழு நாளை கூடுகிறது. இதில் கட்சி நிர்வாகம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.