ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ், கோவா, பார்பேர்வ் பிளாக், நாகா மக்கள் கட்சி என ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு கட்சிக்கும் ஆட்சி அமைப்பது அல்லது வாக்குவங்கி அதிகரிப்பது என ஏதாவது ஒரு வகையில் பலன் கிடைத்திருந்த போதும், காங்கிரஸ் கட்சிக்கு தான் மிகப்பெரிய பின்னடைவாக இந்த தேர்தல் அமைந்துள்ளது.
பஞ்சாபில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி, கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருந்தும், அதை தவற விட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் நிலைமை இன்னும் மோசம். நாட்டின் மிகப் பழமையான அரசியல் கட்சியால், நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் வெறும் 2 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்துள்ளது.
இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியில் உறுதியான தலைமை இல்லாதது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். காங்கிரஸ் கட்சியில் இப்பொழுது தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்துவரும் போதும், அவரால் தீவிரமான தேர்தல் பணிகளை எதையும் செய்ய முடியவில்லை என்பதுதான் எதார்த்தம்.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கூட அவரால் ஒரு தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட செல்ல இயலவில்லை. இவை தவிர கட்சியினரை அழைத்து ஆலோசனைக் கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவது, கட்சித் தாவல்கள் ஏற்படும் போது சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசி சமாதானம் செய்வது, கூட்டணி வியூகங்களை அமைப்பதற்கான பிற கட்சியினருடன் விவாதிப்பது போன்ற எதுவும் கட்சியின் தலைவர் என்ற முறையில் சோனியா காந்தி மேற்கொள்ளவில்லை என்பதுதான் கால சூழல்.
அவரால் மேற்பார்வை மட்டும்தான் செய்ய முடிகிறது. இதனால்தான் கேப்டன் இல்லாத கப்பல் போல காங்கிரஸ் கட்சி தடுமாறி மூழ்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். உதாரணமாக உத்தரகண்ட் மாநிலத்தில் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும், முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத்திருக்கும் இடையே முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் சிக்கல் தொடங்கி, இரு தலைவர்களும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை பொது வெளியில் சொல்ல, ஒரு கட்டத்திற்கு மேல் ஹரிஷ் ராவத் தலைமை என்னை கைவிட்டு விட்டது என வருத்தப்பட அதற்குப்பிறகுதான் ராகுல்காந்தி தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தார்.
ஆனால் அது ஏற்படுத்திய தாக்கம்தான் தற்பொழுது அம்மாநிலத்தில் அக்கட்சிக்கு தோல்வியை கொடுத்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆறு மாதத்திற்கு முன்பாக யாரை கேட்டிருந்தாலும் காங்கிரஸ் கட்சி தான் அங்கு மீண்டும் ஆட்சி அமைக்கும் என உறுதியாகச் சொல்லி இருப்பார்கள்.
3 வேளாண் சட்டங்கள் உள்ளிட்டவை காரணமாக அந்த அளவிற்கு மத்திய அரசின் மீதான அம்மாநில மக்களின் வெறுப்பை அப்படியே அறுவடை செய்து தேர்தல் வெற்றியாக மாற்றி இருக்கவேண்டிய காங்கிரஸ் கட்சி, மீண்டும் உட்கட்சி பூசலில் சிக்கி சின்னாபின்னமாகி தற்பொழுது
ஆட்சிக் கட்டிலில் இருந்து இறங்கி உள்ளது.
நவ்ஜோத் சிங் சித்து முதல்வர் பதவிக்கு ஆசைப்பட, கட்சியின் தலைமைக்கு எதிராகவே சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்ல, அது கட்சியினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் காங்கிரஸ் மீதான ஒருவித கசப்புணர்வை உருவாக்க, இவை எது குறித்தும் தலைமை சலனப் படாமல் மௌனம் காத்தது. அதற்கான விலையை தான் தற்பொழுது தேர்தலில் அது கொடுத்துள்ளது.
கோவா, மணிப்பூர் மாநிலங்களிலும் இதே நிலைமைதான். உத்தரப்பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை வேட்பாளர்களை அறிவிப்பதில் இருந்து பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது வரை, அத்தனையிலும் அவ்வளவு பெரிய ஓட்டைகள். தேர்தலை ஒட்டி நடத்திய மாரத்தான் போட்டி விபத்தில் முடிந்தது. பெண்களை மையப்படுத்தி காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட விளம்பரங்களில் இடம்பெற்ற பெண், கடைசி நேரத்தில் பாஜகவில் இணைந்தது நட்சத்திரப் பேச்சாளர்களாக அறிவிக்கப்பட்ட பெரும்பாலான தலைவர்கள் பிரச்சாரங்களுக்கு கலந்து கொள்ளாதது, இவையெல்லாம் காங்கிரஸ் கட்சியே எதிர்பார்க்காத குளறுபடிகள்.
ஏற்கனவே இதனை மேற்கோள்காட்டி தான் காங்கிரஸ் கட்சியின் இருபத்தி மூன்று முக்கிய தலைவர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். ஒவ்வொரு முறை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் உள்ளிட்டவை நடத்தப்படும் போது, கட்சிக்கு தலைமை வேண்டும் என இந்த தலைவர்கள் வலியுறுத்துவதும், அதற்கு சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும், தேர்தல் நடத்தப்படும் என கட்சித் தலைமை உறுதி அளிப்பதுமாக நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஆனால் உறுதியான எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாததால், அடுத்தடுத்து வரக்கூடிய தேர்தல்களில் தொடர்ந்து அக்கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது. எனவே நாளையதினம் நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் இவை தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– நிரஞ்சன் குமார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM