டெல்லி : உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் படுதோல்வி சந்தித்து இருக்கும் நிலையில், குலாப் நபி ஆசாத்தின் இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக ஏற்கனவே போர் கொடி தூக்கிய 23 மூத்த தலைவர்கள் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் பல தலைவர்கள் நேற்று டெல்லியில் உள்ள குலாம் நபி ஆசாத் இல்லத்தில் கூடி விவாதித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசின் மூத்த எம்பிக்களான ஆனந்த் ஷர்மா, மனீஷ் திவாரி, கபில் சிபல் உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் 5 மாநில தேர்தல் தோல்வி குறித்து விரிவாக விவாதித்து எதிர்கால திட்டம் குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். புதிய மற்றும் நிரந்தர தலைவரை காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் தலைவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், உட்கட்சி குழப்பங்களுக்கு முடிவு கட்டும் வகையில், விரைவில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தக்வல்கள் வெளியாகி உள்ளது. அப்போது உட்கட்சி தேர்தலை விரைந்து நடத்துவது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.