உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, 15 நாள்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. பல இடங்களில் ரஷ்யாவின் வான்வழி தாக்குதலால் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.
இந்நிலையில், உக்ரைன் மக்களின் உயிரை காப்பாற்ற கூகுள் நிறுவனம் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதன்படி, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வான்வெளி தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கைகளை வழங்கும் ஏர் ரெய்டு அலர்ட் சேவையை கூகுள் தொடங்கியுள்ளது.
இது நாட்டில் தற்போதுள்ள வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை அமைப்புகளுக்கு துணையாக செயல்படும் என்றும், அரசு தரப்பில் வழங்கப்படும் எச்சரிக்கைகளின் அடிப்படையிலே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உதவி மூலம், போர் தாக்குதல் நடைபெறவுள்ள இடத்தை முன்க்கூட்டியே அறிந்து, அங்கிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.
இதுதவிர, கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள Ukrainian Alarm செயலியை டவுன்லோடு செய்வதன் மூலம், வான்வழி தாக்குதல் தொடர்பான நோட்டிபிகேஷன்களை உக்ரைன் பயனாளர்கள் பெறலாம்.
ஏர் ரெய்டு அலர்ட் சேவை குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட பதிவில், “லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் வான்வெளி தாக்குதல் குறித்த எச்சரிக்கைகளை நம்பியே பாதுகாப்பான இடங்களுக்கு செல்கின்றனர். எனவே, உக்ரைன் அரசுடன் இணைந்து, உக்ரைனில் ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்துவோருக்கு வான்வழி தாக்குதல் குறித்து எச்சரிக்கையை வழங்கிட இந்த சேவையை தொடங்கியிருக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலை ட்விட்டரில் பகிர்ந்த ஆண்ட்ராய்டு இன்ஜினியரிங் துணை தலைவர் டேவ் பர்க், “பூகம்பங்கள் குறித்த எச்சரிக்கைகளுக்கு நாங்கள் பயன்படுத்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உக்ரைன் விமான தாக்குதல் எச்சரிகைகளை அனுப்புகிறோம். இந்த வசதி இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஓரிரு நாளில், அனைத்து உக்ரைன் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் கிடைத்துவிடும். குறுதிய காலத்தில் இதனை செய்து முடித்த எங்கள் குழுவினருக்கு நன்றி தெரிவிக்கிறோம்” என்றார்.
மேலும், கூகுள் மற்றொரு வலைத்தள பதிவில், ரஷ்ய அரசு நிதியளிக்கும் பல ஊடக நிறுவனங்களை உலகளாவிய அளவில் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில், ரஷ்ய அரசின் நிதியுதவி பெற்ற மீடியா நிறுவனங்களின் அனைத்து பயன்பாடுகளும் Play Store இலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
மார்ச் 10 அன்று, பிளே ஸ்டோர் மற்றும் யூடியூப் ஆகியவற்றில் யூடியூப் பிரீமியம், சேனல் மெம்பர்ஷிப்கள், சூப்பர் சாட் மற்றும் மெர்ச்சண்டைஸ் உள்ளிட்ட அனைத்து கட்டண அடிப்படையிலான சேவைகளையும் ரஷ்யாவில் கூகுள் நிறுத்தியது. ஏற்கனவே மார்ச் 4 அன்று ரஷ்யாவில் அனைத்து விளம்பரங்களையும் கூகுள் இடைநிறுத்தியது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு தொடங்கியது முதலே, பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது சேவையை ரஷ்யாவில் நிறுத்தியுள்ளது. டிஜிட்டல் உலகில் ரஷ்யா தனித்துவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது