அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த புதன்கிழமையன்று `டிஜிட்டல் டாலர்’ உருவாக்கத் தொடங்குமாறு அமெரிக்க அரசு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தற்போது கிரிப்டோகரன்சி போன்ற தனியார் டிஜிட்டல் கரன்சியின் பயன்பாடு மற்றும் வரவேற்பு உச்சத்தில் இருப்பதால், அமெரிக்கா அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்துவதில் இருக்கும் நன்மைகள் மற்றும் அபாயங்களை மதிப்பிட ஆரம்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து,
அமெரிக்க பெடரல் வங்கி விரைவில் அமெரிக்க டாலர் நோட்டுகள் போலவே அதிகாரபூர்வமான டிஜிட்டல் டாலரை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிட்காயினின் உலகளாவிய வரவேற்பு மற்றும் டிஜிட்டல் பேமென்ட் அதாவது, யு.பி.ஐ (UPI) செயலிகளில் வளர்ந்துவரும் பயன்பாடு அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்துவதில் உலக நாடுகளுக்கு ஆர்வத்தை வளர்த்துள்ளது. பெரும்பாலான உலக நாடுகளின் சென்ட்ரல் வங்கிகள் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகின்றன. அதில் நைஜீரியா அக்டோபர் மாதம் `விர்ச்சுவல் மணி’ என்னும் கரன்சியை அறிமுகப்படுத்தியது. எல் சால்வடோர் என்னும் மத்திய அமெரிக்கப் பகுதியில் உள்ள நாடு பிட்காயினை சட்டபூர்வ பணமாக வழங்க அனுமதித்துள்ளது. மேலும், இந்தியா இந்த ஆண்டுக்குள் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தவுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
`டிஜிட்டல் டாலர்’ என்றால் என்ன?
பணம் அறிமுகப்படுத்துவதற்கு முன்னால் நமது முன்னோர்கள் பண்டமாற்று முறை வைத்து பரிவர்த்தனைகளைச் செய்து வந்தனர். தற்போதுள்ள நவீன உலகில் பணநோட்டுகள் வைத்து பரிவர்த்தனை செய்வது கணிசமாகக் குறைந்து வருகிறது. எனவே, டிஜிட்டல் உலகுக்கு டிஜிட்டல் கரன்சி தேவைப்படுகிறது.
அமெரிக்காவின் டிஜிட்டல் டாலர் கான்செப்ட் சாதாரணமான பண நோட்டுகளைப் போல வங்கியில் டெபாசிட் செய்து செலவழிக்கும் முறை கிடையாது. டிஜிட்டல் கரன்சி நேரடியாக ஃபெடரல் ரிசர்வ் கணக்கில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வங்கி மூலம் இயங்காது. டிஜிட்டல் டாலர் அதன் பேப்பர் கரன்சி மதிப்புக்கு நிகராக இருக்கும்.
கிரிப்டோகரன்சியான பிட்காயின் போன்ற கரன்சி அதிக ஏற்ற இறக்கங்களைக் கொண்டது. ஆனால், டிஜிட்டல் டாலர் நிலையான மதிப்பைக் கொண்டிருக்கும் என்கிறார்கள். ஆனால், டிஜிட்டல் டாலர் பிட்காயினைப் போல பிளாக்செயின் தொழில்நுட்பத்தைக் கொண்டு இயங்குமா அல்லது ஏதேனும் பேமெண்ட் கார்டுயுடன் இணைக்கப்படுமா போன்ற முக்கிய கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படவில்லை.
ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் கரன்சி எக்ஸ்பர்ட் டாரல் டஃபி, “ `டிஜிட்டல் டாலர்’ நடைமுறைக்கு வர சில வருட காலங்கள் ஆகலாம். இதை அறிமுகப்படுத்துவதில் உள்ள சவால்கள் ஏராளம். எனவே, அதிகாரிகள் எந்தத் தொழில்நுட்பம் சிறந்தது என்று முறையாக ஆய்வு செய்துதான் முடிவுகளை எடுக்க இயலும்’’ என்றார்.
டிஜிட்டல் டாலரின் நன்மைகள் மற்றும் சவால்கள்!
டிஜிட்டல் டாலர் பயன்படுத்துவதால் பணப்பரிமாற்றங்கள் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மூலம் நடக்காது. அதனால் கமிஷன் மற்றும் பரிவர்த்தனைக் கட்டணங்கள் குறையும். சர்வதேசப் பரிவர்த்தனைகள் வேகமாகவும் குறைந்த கட்டணத்தோடு மேற்கொள்ள டிஜிட்டல் கரன்சி உதவும்.
ஆனால், சிஸ்டம் ஃபெயிலியர் மற்றும் சைபர் அட்டாக் போன்ற அபாயங்கள் இந்த வகை கரன்சி பயன்படுத்துவதில் உள்ளது.
மேலும், இந்த முறையில் பிரைவசி சிக்கல்கள் இருக்கின்றன. ஏனென்றால், அரசாங்கத்தால் நமது அனைத்துப் பரிவர்த்தனைகளும் பார்க்க இயலும். இவையெல்லாம் டிஜிட்டல் கரன்சி வங்கிகளுக்கு பெரும் சவாலாக அமையலாம்.
வங்கிகள் தற்போது வாடிக்கையாளரின் வைப்புத்தொகையைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு கடன் கொடுக்கின்றன. டிஜிட்டல் டாலர் பயன்படுத்தினால் வங்கிகளிடம் குறைந்த பணமே வைத்திருக்க முடியும். டிஜிட்டல் கரன்சியின் முக்கியமான நன்மை கறுப்புப் பணம் ஒழித்தல். அனைத்துப் பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் மூலம் நடப்பதால் அரசாங்கத்துக்கு வரி செலுத்துவது உயரும். இதுவே டிஜிட்டல் கரன்சி கொண்டு வருவதில் அரசின் முக்கியமான நோக்கம் என்கிறார்.
டிஜிட்டல் டாலர் வருவதால், போலி டாலர்களும், கறுப்புப் பணத்தின் ஆதிக்கமும் குறைந்தால் சரிதான்!