TNPSC group 2 exam chances to correct errors in application: குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தம் செய்துகொள்ள விரும்பினால், மார்ச் 23 வரை திருத்திக் கொள்ளலாம் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழக அரசு துறைகளுக்கான ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது. குரூப் 2, 2ஏ தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை பிப்ரவரி மாதம் 23ம் தேதி தொடங்கியது. மேலும், இந்த தேர்வுக்கு இம்மாதம் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில், இதுவரை இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களில் பலர் விண்ணப்பத்தை இறுதியாக சமர்ப்பித்த பிறகு, சில தகவல்களை தவறாக உள்ளீடு செய்துவிட்டதாகவும், அந்த தவறுகளை திருத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் தேர்வாணையத்தை தொடர்புகொண்டனர். இதையடுத்து, விண்ணப்பங்களில் திருத்தம் செய்துகொள்ள TNPSC மீண்டும் வாய்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி, மார்ச் 14ம் தேதி முதல் மார்ச் 23ம் தேதிவரை விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பங்களை திருத்திக் கொள்ளலாம்.
இதுகுறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் (EDIT) செய்ய விரும்பும் தேர்வர்கள் கீழ்கண்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- இணையவழி விண்ணப்பத்தில் உள்ள தகவல்களில், ஒரு சில தகவல்கள் தேர்வரின் ஒருமுறை நிரந்தரப்பதிவில் (OTR)இருந்து முன்கொணரப்பட்டவை (எடுத்துக் கொள்ளப்பட்டவை). அவ்வாறான தகவல்களை திருத்தம் செய்வதற்கு முதலில் தேர்வர்கள் தங்களின் ஒருமுறை நிரந்தரப்பதிவில் (EDIT PROFILE) சென்று உரிய திருத்தங்களைச் செய்து அவற்றைச் சேமிக்கவும்.
- அதன்பிறகு, விண்ணப்பத்திற்கு எதிரே உள்ள EDITல் சென்று, விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்பும் விவரங்களை திருத்தம் செய்து, இறுதியாக சேமித்து, அதனை சமர்ப்பித்து (SUBMIT), அதற்குரிய நகலினை அச்சுப் பிரதி (Print Out)எடுத்துக் கொள்ளவும்.
- விண்ணப்பத்தில் திருத்தம் செய்த பிறகு, திருத்தப்பட்ட விவரங்களை இறுதியாக சேமித்து சமர்பிக்கவில்லையென்றால், தேர்வர் இதற்கு முன்பு சமர்ப்பித்துள்ள விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
- திருத்தம் செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையில், தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், உரிய தேர்வுக் கட்டணத்தை இணைய வழியாக செலுத்தவும். ஏற்கனவே செலுத்தியவர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை.
இதையும் படியுங்கள்: JEE Exam: 21 ஏழை மாணவர்களை சொந்த செலவில் விமானத்தில் அனுப்பி வைத்த நெல்லை கலெக்டர் விஷ்ணு!
மேலும், இது தொடர்பான முழு விளக்கங்களை http://www.tnpscexams.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம். மேலும் 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்புகொண்டும் விளக்கம் பெறலாம் என்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“