அமிர்தசரஸ் நகரில் வெற்றிப் பேரணி நடத்திய கெஜ்ரிவால், பகவந்த் மான்

அமிர்தசரஸ்:
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளை கைப்பற்றிய ஆம் ஆத்மி, முதல்முறையாக பஞ்சாபில் ஆட்சி அமைக்கிறது.
தொடர்ந்து, சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த பகவந்த் மான் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, பகவந்த் மான் வரும் 16-ம் தேதி முதல்வராக பொறுப்பு ஏற்கவுள்ளார்.
இந்நிலையில், பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இன்று அமிர்தசரஸ் பொற்கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, பிரமாண்டமான வெற்றிப் பேரணி நடத்தினர்.  
அப்போது பேசிய கெஜ்ரிவால், பல ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் மாநிலத்தில் நேர்மையான முதல்வர் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார். தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று உறுதி அளித்த கெஜ்ரிவால், பஞ்சாப் மக்களுக்காக அரசாங்கத்தின் ஒவ்வொரு பைசாவும் செலவழிக்கப்படும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.