பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பாஜகவை வீழ்த்தி தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி அபாரமாக வெற்றிப் பெற்றது. 117 தொகுதிகளில் 92 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி முதல்முறையாக பஞ்சாபில் ஆட்சி அமைக்கிறது.
தொடர்ந்து, சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த பகவந்த் மான் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, முதல்வர் வேட்பாளராக களமிறங்கி வெற்றிப்பெற்ற பகவந்த் மான் வரும் 16-ம் தேதி முதல்வராக பொறுப்பு ஏற்கவுள்ளார்.
இந்நிலையில், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் பஞ்சாப் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அமிர்தசரஸில் இன்று வெற்றிப் பேரணி நடத்த உள்ளனர்.
இதற்காக, அமிர்தசரஸ் விமான நிலையத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரை பகவந்த் மான் வரவேற்றார்.
இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் நிர்வாகிகள் பகவந்த் மான் ஆகியோர் பொற்கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.
பின்னர் பகவந்த் மான் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையும் படியுங்கள்.. திருப்பதி அலிபிரி சோதனை சாவடியில் பாஸ்டேக் அமல்படுத்த ஆலோசனை