கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா வருடந்தோறும் மார்ச் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழா இலங்கை, தமிழக பக்தர்கள் கலந்துகொண்டு இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிலுவைப் பாதையும், அதைத்தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.
பின்னர், நேற்று மீண்டும் சிலுவைப் பாதை நடத்தி, இருநாட்டு மீனவர்களுக்கு இடையிலான பிரச்னைகள் தீர சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு, பின்னர் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவுபெற்றது.
இந்த திருவிழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகத்திலிருந்து 81 பக்தர்கள் மட்டும் சென்றிருந்தனர். அதேபோல, இலங்கையிலிருந்து கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட 88 பக்தர்கள் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொண்டனர்.
இலங்கை-தமிழக பக்தர்கள் கூட்டு சிறப்பு திருப்பலியில் ஈடுபட்ட பின்னர், திருவிழா நிறைவுபெற்றதால் இலங்கை, தமிழக பக்தர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். அதன்படி ராமேஸ்வரம் துறைமுகத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகளில் வந்திறங்கிய தமிழக பக்தர்கள், இலங்கையிலிருந்து தடை செய்யப்பட்ட பொருள்கள் ஏதேனும் கொண்டு வந்துள்ளார்களா என போலீஸார் முழுமையாக சோதனை செய்தனர்.
கச்சத்தீவில் இருநாட்டு மீனவர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக மீனவர் ஆண்டர்சன் ரூபன் நம்மிடம் பேசினார். “கச்சத்தீவு திருவிழாவுக்கு சென்ற தமிழக, இலங்கை மீனவர்களிடையே இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நட்பு ரீதியான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் தமிழக மீனவர்கள் இழுவைப்படகுகள் மூலம் மீன் பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு தமிழக மீனவர்கள் இழுவை படகுகள் மூலம் மீன் பிடிப்பதை நிறுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
கச்சத்தீவில் நட்பு ரீதியிலான பேச்சுவார்த்தையின் போது இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், தற்போது சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், அவர்களுடைய படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் இலங்கை, தமிழக மீனவர்களுக்கு இடையே நட்பு ரீதியிலான இந்த பேச்சுவார்த்தை இதோடு நின்று விடாமல், இரு நாட்டு அரசுகளும் கூடிய விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்” என்றார்.