உக்ரைனில் இருந்த இந்தியர்களை மீட்க திறம்பட பாடுபட்ட மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் பாராட்டுதலையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் போர் நடைபெற்று வந்த நேரத்தில் அங்கிருந்த இந்தியர்களை மீட்டு தாயகம் கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் முழுமையாக பயனளித்தது.
குறிப்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உக்ரைன் நாட்டோடு தொடர்ந்து தொடர்பில் இருந்து இந்திய மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்தது பாராட்டுக்குரியது. அதாவது ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடக்கும் போரினால் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் எவரும் பாதித்துவிடக்கூடாது என்பதற்காக அந்நாடுகளுடன் மத்திய அரசு தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தது.
அனைத்து இந்தியர்களையும் பத்திரமாக மீட்க வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நோக்கமாக இருந்தது. இதற்காக ‘ஆபரேஷன் கங்கா’ திட்டம் வகுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டதால் மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மேலும் உக்ரைனில் இருந்த இந்தியர்களுக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்கியதும், அந்நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு ஏற்பாடு செய்ததும், அங்கிருந்து விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு மீட்டு வந்ததும் சவாலான பணி என்றாலும் அதனை வெற்றிகரமாக செய்து முடித்தது மத்திய அரசு.
உக்ரைனில் இருந்த தமிழகம் உள்ளிட்ட இந்தியாவைச் சேர்ந்தவர்களை தாய்நாட்டிற்கு பத்திரமாக மீட்பதற்காக மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளும், நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது.
மேலும் பாரதப் பிரதமர் அவர்கள், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் இந்திய தூதரகம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் தனிக்கவனம் செலுத்தியதற்கு த.மா.கா சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.