லீவ்-உக்ரைன் தலைநகரை நோக்கி வேகமாக முன்னேறி வரும் ரஷ்ய ராணுவத்தினர், மெலிடோபோல் நகரின் மேயரை கடத்திச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மரியுபோல் நகரில் நடந்த தாக்குதலில் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்திருந்த, 80 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. ரஷ்ய ராணுவம் கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் நுழைந்து, தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. வான் வழியே ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் வீசப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.இதையடுத்து லட்சக்கணக்கான மக்கள் உயிர் பிழைக்க, அண்டை நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர்.
இதுவரை, 25 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நகரை விட்டு வெளியேற முடியாத மக்கள், பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், ரஷ்ய படையினர் உக்ரைனின் கீவ் நகரை நெருங்கி உள்ளது தெரியவந்துள்ளது. துறைமுக நகரமான மரியுபோலில், கடந்த 12 நாட்களில் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக, அந்நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.இந்நகரில் ரஷ்ய படையின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, மசூதி ஒன்றில் குழந்தைகள் உட்பட 80 பேர் தஞ்சமடைந்து இருந்தனர். இதில் ரஷ்ய ராணுவத்தினர் நேற்று குண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில், மசூதி இடிந்து தரைமட்டமானது. இதில், 80 பேரும் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று வெளியிட்ட, ‘வீடியோ’ செய்தியில் கூறியுள்ளதாவது:இன்னும் எத்தனை நாட்களுக்கு, நம் நிலம் பாதுகாக்கப்படும் என்பதை என்னால் கூற இயலாது. எனினும், நம்மால் கண்டிப்பாக இதை பாதுகாக்க முடியும். எனவே, மன தைரியத்தை இழக்காமல், தொடர்ந்து சண்டையிடுங்கள்.மக்கள் அனைவருக்கும், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதிபடுத்த தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.
உக்ரைன் நாட்டை பாதுகாக்க போராடிய, மெலிடோபோல் நகரின் மேயர் ஐவன் பெடோரோவை, ரஷ்ய படையினர் கடத்திச் சென்றுள்ளனர். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ரஷ்ய படையின் கோழைத்தனத்தை, இது வெளிப்படுத்தி உள்ளது. இது ஒரு பயங்கரவாத செயல்.இவ்வாறு அவர் கூறினார்.ரஷ்யா கடும் எச்சரிக்கைஉக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில், ‘ரஷ்யா மீதான தடைகளை தளர்த்தாவிட்டால், விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையம், கடல் அல்லது நிலத்தில் விழுந்து நொறுங்கும்’ என, ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூன்றாம் உலகப்போர்: பைடன் கவலை
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று கூறியதாவது:தற்போது நடக்கும் போரில், ரஷ்யாவால் உக்ரைனை ஒருபோதும் வீழ்த்த முடியாது. ரஷ்ய எல்லையை ஒட்டி, 13 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும், ‘நேட்டோ’ படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த படையினர் ரஷ்யா மீது தாக்குதல் நடத்தினால், அது, மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுத்துவிடும். இதன் காரணமாகவே, ரஷ்யா மீது தாக்குதல் நடத்தாமல் அமைதி காத்து வருகிறோம். எனினும், உக்ரைனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா தொடர்ந்து வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.