ரஷ்யப் படைகள் தலைநகர் கீவை ஆக்கிரமிக்க முயற்சித்தால் மரணப் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
ரஷ்ய துருப்புக்கள் தலைநகர் கீவை சூழ்ந்துள்ள நிலையில், இன்று காலை வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒளித்துள்ளது. இது மீண்டும் அங்குள்ள குடியிருப்பாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், தலைநகர் கீவிலிருந்து இன்று காலை சமூக ஊடகங்களில் தோன்றிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்ய தாக்குதல்களின் மூன்றாவது வாரத்தில் சில சிறிய நகரங்கள் இல்லாமல் போனதாக கூறினார். இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு ஐரோப்பிய நாடு மீதான மிகப்பெரிய தாக்குதல் என கூறப்படுகிறது.
அவர் சனிக்கிழமை வெளியிட்ட வீடியோவில், “ரஷ்யர்கள் கீவ் நகரத்தின் வரலாற்றை வெறுமனே அழிக்க நினைத்திருந்தால்… நம் எல்லோரையும் அழித்தால் மட்டுமே அவர்கள் தலைநகருக்குள் நுழையமுடியும். அது தான் அவர்களின் இலக்கு என்றால், அவர்கள் உள்ளே வரட்டும், ஆனால் அவர்கள் உயிரை அவர்கள் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்” கூறினார்.
உக்ரைனிலிருந்து குறைந்தது 2.5 மில்லியன் குடிமக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ளனர். ஆனால், ரஷ்யாவின் தொடர் ஷெல் தாக்குதல்களால் சில நகரங்களில் இருந்து நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.