தஞ்சாவூர்: தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு நெல் உற்பத்தி அதிகம். உற்பத்தி அதிகரிப்பால், நெல்லை பாதுகாப்பதில் மிகப் பெரிய சவால் உள்ளது. எனவே நெல்லுக்கு மாற்றாக மாற்றுப் பயிர் சாகுபடியை முன்னெடுத்துச் செல்லவேண்டிய நிலையில் இருப்பதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
2022 – 2023-ம் ஆண்டுக்கான வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவசாயிகளுடனான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கருத்துக்கேட்பு கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு நெல் உற்பத்தி அதிகம். கடந்த ஆண்டு 48 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு 54 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. உற்பத்தி அதிகரிப்பால், நெல்லை பாதுகாப்பதில் மிகப் பெரிய சவால் உள்ளது. எனவே நெல்லுக்கு மாற்றாக மாற்றுப் பயிர் சாகுபடியை முன்னெடுத்துச் செல்லவேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.
இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லை, விற்பனை செய்யும் இயக்கமாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா மறுமலர்ச்சி திட்டம் போன்று, தற்போது கலைஞர் வேளாண் மறுமலர்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,997 கிராமங்களில் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 5 ஆண்டுகளில் வேளாண் உற்பத்தியில் இக்கிராமங்கள் முழுமை பெறும். அப்போது தமிழகத்தில் பசுமை புரட்சி ஏற்படும்.
இயற்கை விவசாயத்தைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான விவசாயிகளிடம் ஏற்பட்டு வருகிறது. எனவே வரும் மூன்று ஆண்டுகளில் வேளாண் புரட்சி உருவாக வாய்ப்புள்ளது. அதற்கான நடவடிக்கையைத் தமிழக முதல்வர் எடுத்து வருகிறார்.
விவசாயிகளின் கருத்துகள் அனைத்தும் வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்தாண்டு முதன்முறையாக வேளாண்மைக்கு தனி நிதிநிலை உருவாக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றது. அப்போது கருவாக இருந்த வேளாண் நிதி நிலை அறிக்கை, தற்போது 6 மாத குழந்தையாக வளர்ந்துள்ளது. இதன் மூலம் 128 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது நமது மாநிலத்தில் அதிகமாக ரசாயன உரங்களை பயன்படுத்தியதால், மண் மலட்டுத்தன்மையாக மாறிவிட்டது. எனவே மண்ணை வளப்படுத்த தனியாக திட்டம் கொண்டுவரப்படவுள்ளது. இதற்காக இயற்கை விவசாயத்தையும், தேனீ வளர்ப்பையும் ஊக்குவிக்கப்படவுள்ளது என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: வருகிற ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்படவுள்ளது. நெல் சாகுபடிக்கு இணையாக சிறுதானிய உற்பத்தியை முனைப்பாகக் கொண்டு செல்லும் வகையில் இத்திட்டம் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையில்
இயற்கை விவசாயத்துக்கான பல்வேறு திட்டங்களை உள்ளடக்கி இருக்கும்.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இதுவரை விவசாயிகளை காணொலி மூலம் தொடர்பு கொண்டு அவர்களது கருத்துகளை கேட்டுள்ளோம். விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் முழுமை அடையும் விதமாக இந்த நிதிநிலை அறிக்கை அமையும் என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசின் செயலர் சி. சமயமூர்த்தி, வேளாண் துறை இயக்குனர் ஆ. அண்ணாதுரை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை இயக்குநர் எஸ்.நடராஜன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் ஆர். பிருந்தாதேவி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.