லக்னோ: எம்பி பதவியில் நீடிப்பதா? எம்எல்ஏவாக தொடர்வதா? என்ற குழப்பத்துக்கு மத்தியில் அகிலேஷ் தலைமையில் வரும் 21ம் தேதி சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் லக்னோவில் நடக்கிறது. உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்றதால், யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராகப் பதவியேற்க போகிறார். மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றியதால் இன்று முதல்வர் யோகி ஆதித்ய நாத் டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கிறார். இந்நிலையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், அசம்கரில் லோக்சபா தொகுதி எம்பியாக இருப்பதால், மைன்புரியின் கர்ஹால் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அல்லது எம்எல்ஏவாக பணியை தொடர விரும்பினால், தனது எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் எம்பியாக டெல்லி அரசியலை கவனிப்பதா? அல்லது எதிர்கட்சி தலைவராக மாநில அரசியலை கவனிப்பதா? என்று அகிலேஷ் யாதவ் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இதுகுறித்து சமாஜ்வாதி வட்டாரங்கள் கூறுகையில், ‘அகிலேஷ் யாதவ் எம்பியாக இருக்கவே விருப்பப்படுகிறார். அதனால் கர்ஹால் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். இதுதொடர்பாக மார்ச் 21ம் தேதி நடைபெறும் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்’ என்றார்.