எப்போதெல்லாம் தாம்பத்தியத்திற்கு `நோ' சொல்லவேண்டும்? – காமத்துக்கு மரியாதை – S2 E11

விருப்பமிருந்தால் வாழ்நாளின் இறுதிவரை தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாம். ஏன் மாதவிலக்கு நாள்களில், கர்ப்ப காலத்தில்கூட தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாம் என்று பல கட்டுரைகளிலும் காணொளிகளிலும் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். அதே நேரம், எப்போது செக்ஸ் கூடாது; யாருடன் செக்ஸ் கூடாது; எந்தச் சூழ்நிலைகளில் செக்ஸ் கூடாது என்பது பற்றியும் சொல்ல வேண்டியது அவசியம்” என்ற பாலியல் மருத்துவர் காமராஜ், அவை பற்றி விளக்க ஆரம்பித்தார்.

பாலியல் மருத்துவர் காமராஜ்

இதுவே பாதுகாப்பு!

ஒரு பார்ட்னருடன் மட்டும் உறவில் இருப்பது எப்போதும் நல்லது. இதை நான் ஒழுக்கம் சார்ந்த விஷயமாகச் சொல்லவில்லை. ஏனென்றால், மனம் ஒத்துப் போகாமல் பிரிந்து, அதன் பின்னர் மற்றொரு துணையைத் தேர்ந்தெடுத்து வாழ்பவர்களின் நிலைமை என்பது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். முதல் மணமோ, மறுமணமோ, நான் ஏற்கெனவே சொன்னதுபோல ஒரு பார்ட்னருடன் வாழ்வது உறவுச்சிக்கல்களிலிருந்தும், பால்வினை நோய்களிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கும். இதை என்னுடைய மருத்துவ அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.

மைனரா..? நோ!

சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்வது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் சிறுமியரை குரூமிங் செய்து அவர்கள் சம்மதத்துடன் பாலுறவில் ஈடுபடுகிறார்கள். இரண்டுமே குற்றம்தான். சம்பந்தப்பட்டப் பெண்ணே உறவுகொள்ள விருப்பம் தெரிவித்தாலும், அவர் மைனராக இருந்தால் நோ செக்ஸ். மீறி உறவுகொள்வது சட்டப்படி குற்றம். தண்டனையும் கிடைக்கும்.

திருமணம் தாண்டிய உறவா?

ஒரு திருமண பந்தத்திலிருந்து வெளியே வந்த பிறகு, விருப்பப்படி இன்னொரு துணையுடன் வாழலாம். ஆனால், ஒரு திருமண உறவுக்குள் இருக்கும்போதே `இன்னோர் உறவில்’ இருப்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இதை நோக்கி யாராவது உங்களைத் தூண்டினாலும் அதற்கு அழுத்தமாக நோ சொல்லுங்கள். உங்களுடைய தயக்கம் எதிராளிக்கு சம்மதம் தெரிவித்தது போலாகிவிடும். ஆண், பெண் இருவருமே திருமணமாகும்போதே `எக்ஸ்ட்ரா மேரிட்டல் அஃபையரை தவிர்ப்போம்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம்.

Couple (Representational Image)

மனைவியே என்றாலும்…

மனைவியே என்றாலும் அவருக்கு உடல்நலம் சரியில்லாதபோதும், விருப்பமில்லாதபோதும் உறவுக்கு வற்புறுத்துதல் மனிதப் பண்பல்ல. மாதவிலக்கின்போதும் உறவுகொள்ளலாம்; கருவுற்றிருக்கும்போதும் உறவுகொள்ளலாம் என்று நான் பலமுறை சொல்லியிருந்தாலும், இதில் மனைவிக்கும் விருப்பமிருந்தால் மட்டுமே ஈடுபட வேண்டும்.

வற்புறுத்துவதும் மிரட்டுவதும்…

மனைவியைத் தவிர மற்ற பெண்களை, செக்ஸுக்கு வற்புறுத்துவது அல்லது மிரட்டி உறவுகொள்ள வைப்பது அல்லது `அதுக்கு பதிலா இது’ என்று பண்டமாற்றுக்கு முயல்வதும் கூடவே கூடாது.

தொற்றுநோய் இருந்தால்…

ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவக்கூடிய கொரோனா, காசநோய் போன்ற தொற்றுநோய்கள் இருக்கையில் செக்ஸை தவிர்ப்பது இருவருக்குமே பாதுகாப்பு.

காமத்துக்கு மரியாதை

பால்வினை நோய்கள் இருந்தால்…

பால்வினை நோய்கள் இருந்தால், வாழ்க்கைத்துணையே என்றாலும், அவர்கள் குணமான பிறகுதான் தாம்பத்திய உறவுகொள்ள வேண்டும். தனக்கு பால்வினை நோய் இருப்பது தெரிந்த பிறகு வாழ்க்கைத்துணையுடன் மட்டுமல்லாமல், மற்றவர்களுடன் உறவு கொள்ளாதீர்கள்.

இந்த வகை உறவுகளுக்கும் நோ சொல்லுங்க!

மற்ற விஷயங்களைப் போலவே பாலியலும் உலகமயமாகிவிட்டது. அதனால், வெளிநாடுகளைப் போல இங்கும் `குரூப் செக்ஸ்’, `ஓர் இரவுக்கு மட்டும்’ என்று மக்களின் மனப்பான்மை மாறிவருகிறது. இவையும் தவிர்க்கப்பட வேண்டியவையே…”

தொடர்ந்து மரியாதை செய்வோம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.