இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியா ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பல்வேறு டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
எஸ்பிஐ வெளியிட்ட அறிக்கையின்படி, 2 கோடி ரூபாய்க்கு மேலான டெபாசிட்களின் வட்டி விகிதம் 20 முதல் 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வட்டி உயர்வு மார்ச் 10 முதல் அமலுக்கு வந்துள்ளது.
211 நாள் முதல் 365 நாட்களில் முதிர்வடையும் ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி 3.30 சதவீதமாக உயர்ந்துள்ளது. முன்னதாக, இந்த திட்டத்தில் 3.10 சதவீதம் வட்டி விகிதம் மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது, இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 3.80 சதவீதத்தில் வட்டி விகிதம் கிடைக்கின்றன.
அதேபோல், 1 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் 2 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கு வட்டி விகிதம் 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. அத்தகைய FD கணக்குகளைத் தேர்ந்தெடுப்போர் தற்போது 3.60% வட்டி வருமானத்தைப் பெறுவார்கள். மூத்த குடிமக்கள் 4.10% வட்டி வருமானத்தைப் பெறக்கூடும்.
இதுதவிர ரூ.2 கோடிக்கு குறைவான பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் 10 புள்ளி உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, 2 முதல் 3 ஆண்டுகள் வரை முதிர்வு கொண்ட டெபாசிட் திட்டங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5.10 சதவீத வட்டி விகிதத்தில் 10 புள்ளிகள் உயர்ந்து, 5.20 சதவீதமாக வட்டி கிடைக்கின்றன.
அதேபோல், 3 முதல் 5 ஆண்டு வரையிலான டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் 5.45 சதவீதமாக உயர்ந்துள்ளது.இதில், 15 புள்ளிகள் வட்டி விகிதம் அதிகரித்துள்ளது.
எஸ்பிஐ மட்டுமல்லாமல், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, கோடாக் மகிந்திரா பேங்க் உள்ளிட்ட பல்வேறு வங்கிகளும் தங்களது வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.